அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியின்போது துப்பாக்கி சூடு: 50 பேர் பலி

  • IndiaGlitz, [Monday,October 02 2017]

அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை இசை நிகழ்ச்சி ஒன்று மேண்டலே பே ஓட்டல் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்றபோது திடீரென உயரமான கட்டிடத்தில் இருந்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் சுமார் 500 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாகவும் திடுக்கிடும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் காயம் அடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மர்ம நபர்கள் சுட்டதும், சிதறி ஓடிய மக்களின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த கொடூர தாக்குதலை அடுத்து அந்த பகுதி முழுவதும் உஷார் நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அங்கிருந்து அனைவரும் வெளியேறும்படியும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.