உடைந்த பாட்டில்களை வைத்து… இந்திய அறக்கட்டளை செய்த கின்னஸ் சாதனை!
- IndiaGlitz, [Thursday,February 18 2021]
உடைந்த பாட்டில்களை வைத்து, மும்பை பகுதியில் செயல்பட்டு வரும் பிளாஸ்டிஇண்டியா எனும் அறக்கட்டளை புது கின்னஸ் சாதனையை படைத்து இருக்கிறது. இந்நிறுவனம் உடைந்த பாட்டில்களை மறுசுழற்சி செய்து அதன் மூலம் உலகிலேயே பெரிய டீ ஷர்டை உற்பத்தி செய்து இருக்கிறது. கடந்த 5, ஜனவரி, 2018 ஆம் ஆண்டு தயாரித்த இந்த டீ ஷர்ட் தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து இருக்கிறது.
உடைந்த பாட்டில்களை மறுசுழற்சி செய்ததன் மூலம் 96.86 மீ (317.78 அடி) நீளமும், 69.77 (228.90) அடி அகலமும் கொண்ட டீ ஷர்டை பிளாண்டிஇண்டியா அறக்கட்டளை தயாரித்து உள்ளது. இதுவரை உலகிலேயே இத்தனை நீளமான டீ ஷர்ட் உருவாக்கப் படவேயில்லை என்றும் கின்னஸ் சாதனை நிறுவனம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளது. மேலும் இதுகுறித்து வெளியிடப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமூக அக்கறையோடு உருவாக்கப்பட்ட இந்த டீ ஷர்ட் தற்போது 10,000 க்கும் மேற்பட்ட பீஸ்களாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றும் பிளாஸ்டிஇண்டியா அறக்கட்டளை தெரிவித்து உள்ளது. உடைந்த பாட்டில்களை மறுசுழற்சிக்கு உட்படுத்துவதையே நாம் புதிதாக கருதும் நிலையில், ஒரு அறக்கட்டளை அதுவும் தன்னுடைய சொந்த முயற்சியால் உலகிலேயே பெரிய டீ ஷர்டை உருவாக்கி அதில் கின்னஸ் சாதனை படைத்து இருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.