ஜெமினிகணேசனுக்கு ஜோடியாகும் 'வேதாளம்' நடிகை

  • IndiaGlitz, [Saturday,November 28 2015]

கோலிவுட்டின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜீவா நடித்த 'யான்' திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி தோல்வி அடைந்தாலும், தற்போது அவர் மூன்று முக்கிய படங்களில் நடித்து வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் திருநாள், ஹன்சிகாவுடன் 'போக்கிரி ராஜா', மற்றும் காஜல் அகர்வாலுடன் 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில், 'ஜெமினி கணேசன்' என்ற புதிய படத்திலும் ஜீவா நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே அறிவித்திருந்தோம்.


இந்நிலையில் இந்த படத்திலும் ஜீவாவுக்கு முன்னணி நடிகை ஒருவர் ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த அஜீத்தின் 'வேதாளம்' படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த நடிகை லட்சுமிமேனன், ஜீவாவுக்கு ஜோடியாக 'ஜெமினிகணேசன்' படத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜெயம் ரவியுடன் 'மிருதன்' படத்தில் நடித்து வரும் லட்சுமிமேனன், அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் 'ஜெமினிகணேசன்' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் முதன்முதலாக ஜீவாவுடன் சூரி மற்றும் 'மெட்ராஸ்' கலையரசன் இணைந்து நடிக்கின்றனர். இயக்குனர் கோபாலகிருஷ்ணன் இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.