அஜித்துக்கு அரசியல், விஜய்க்கு அத்தைப்பொண்ணு. ஹாலிவுட் இயக்குனரின் புதிய திட்டம்

  • IndiaGlitz, [Friday,March 17 2017]

ராஜ்திருசெல்வன் என்ற என்.ஆர்.ஐ, 'லேக் ஆப் ஃபையர்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த படத்தை இயக்கிய ராஜ்திருசெல்வன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது, 'நான் இரண்டு வித்தியாசமான கதைகள் வைத்துள்ளேன். ஒன்று தமிழக அரசியல் குறித்த படம். தமிழக அரசியலில் உண்மையில் என்ன நடக்கின்றது என்றே மக்களுக்கு தெரியவில்லை. இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருவது மட்டுமே தெரிகிறது. ஆனால் இவர்களுக்கு பின்னால் யார் இருக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. அதை தெரியப்படுத்தும் விதமாக அரசியல் படம் ஒன்றை இயக்கவுள்ளேன். இந்த படத்தில் அஜித் நடித்தால் மட்டுமே பொருத்தமாக இருக்கும். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். நிச்சயம் அவர் நடிப்பார் என்று நம்புகிறேன்.

அதேபோல் விஜய்யிடமும் ஒரு கதை கூறியுள்ளேன். இந்த கதை அத்தை பொண்ணு, மாமா பையன் கதை. பையன் இந்தியாவிலும், பொண்ணு அமெரிக்காவிலும் இருப்பார்கள். அத்தை பொண்ணை பார்ப்பதற்காக பையன் அமெரிக்கா செல்வார். அங்கு என்ன நடக்கின்றது என்பதுதான் கதை. இந்த கதையை விஜய்யிடம் கூறியுள்ளேன். விஜய் நடிப்பில் முழுக்க முழுக்க ஹாலிவுட் படமாக ஆங்கிலத்தில் இந்த படத்தை இயக்கவுள்ளேன். தமிழில் விஜய் எத்தனையோ சாதனை செய்துவிட்டார், அவரை ஹாலிவுட்டிலும் சாதனை செய்ய அழைத்து செல்வேன்' என்று கூறியுள்ளார்.