உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு: நயன்தாராவின் 'நெற்றிக்கண்' டிரைலர்

  • IndiaGlitz, [Thursday,July 29 2021]

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவான ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்று முன் வெளியான நிலையில் இந்த டிரைலர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிரடி த்ரில் காட்சிகள் கொண்ட இந்த படத்தில் இளம்பெண்கள் திடீர் திடீரென கடத்தப்படுவதும் இந்த கடத்தல்காரர்களை அடையாளம் காணும் பார்வையில்லாத நயன்தாரா பார்வையற்றவராக இருந்தும் அவர்களை பிடிக்க எப்படி இப்படி உதவுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்பதை இந்த டிரைலரில் இருந்து தெரியவருகிறது.

வில்லனாக அஜ்மல் மிரட்டி இருக்கும் நிலையில் இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் அவருக்கு சவால் விடும் வகையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப்படம் நயன்தாராவுக்கு ஒரு மைல்கல் என்றால் அது மிகையாகாது.

கண்பார்வை தெரியாவிட்டாலும் பார்வை தெரிந்தவர்களை விட அதிகமாக நுண்ணறிவு இருக்கும் கேரக்டரில் நடித்து இருக்கும் நயன்தாரா நடிப்பில் அசத்தி உள்ளார் என்றே கூறவேண்டும். இறுதியில் ’நான் உன்னை என்ன செய்யப் போகிறேன் என்பதை உன்னால் பார்க்க முடியாது என்பதை நினைக்கும்போது எனக்கு பாவமாக இருக்கிறது என்று வில்லன் அஜ்மல் கூறும்போது ’நான் உன்னை என்னவெல்லாம் பண்ண போறேன் என்பதை நீ பாக்க போற பாரு, அத நெனச்சா தாண்டா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு’ என்று நயன் சொல்வதுடன் இந்த டிரைலர் முடிவடைகிறது.

‘அவள்’ திரைப்படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கியுள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார் என்பதும் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னணி இசை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு என அனைத்தும் அம்சமாக உள்ள இந்தப் படம் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.