என் புருஷன் சாவுக்கு அரசும், அந்த ஹோட்டலும் தான் காரணம்: ஒரு அபலை பெண்ணின் கண்ணீர் பேட்டி

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கணவர் சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பியதும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் அதன்பின் திடீரென அவர் மரணம் அடைந்துவிட்டதாகவும், அந்த மரணத்தை கூட தனக்கு இரண்டு நாட்களாக தெரிவிக்காமல் அரசும் அவர் தங்கியிருந்த ஹோட்டல் நிர்வாகமும் அலட்சியமாக இருந்ததாகவும் கொடுத்த கண்ணீர் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணின் கணவர் கடந்த 25ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். சென்னை திரும்பியவுடன் அவர் தனது மனைவிக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். கொரோனா பரிசோதனை எடுத்த பின்னர் தனிமைப்படுத்துதல் காலம் முடிந்தபின் வீட்டுக்கு வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டை ஓட்டலில் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் உங்கள் கணவர் எங்களுடைய ஹோட்டலில் கொரோனா பரிசோதனைக்கு பின் அவர் தெரிவித்திருந்தார்கள். கொரொனா பரிசோதனைக்கு பின் தனிமைப்படுத்துதல் காலத்திற்காக என் கணவர் அந்த ஹோட்டலில் தங்கியிருப்பதாக நானும் நினைத்திருந்தேன்.

ஆனால் இரண்டு நாட்களாக எனது கணவரிடம் இருந்தும், ஓட்டல் நிர்வாகத்திடம் இருந்தும் எந்தவிதமான தகவலும் இல்லை. இதனால் நான் சந்தேகமடைந்து எனக்கு தெரிந்த ஒருவர் மூலம் தேனாம்பேட்டை ஹோட்டலுக்கு போன் செய்தபோது அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. அதன் பின் மீண்டும் அவர்களிடம் போன் செய்தபோது உங்கள் கணவர் இரண்டு நாட்களுக்கு முன் இறந்து விட்டார் என்றும் கழிவறையில் உட்கார்ந்தபடியே இறந்துவிட்டார் என்றும் கூறினார்கள். இதனை அடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து வந்தபோனிலும், ’உங்கள் கணவர் உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாகவும், உடனடியாக வந்து பாடியை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார்கள்.

இப்போது நான் எனது கணவரின் பாடியை வாங்குவதற்காக சென்னை சென்று கொண்டிருக்கிறேன். எனது கணவருக்கு சிங்கப்பூரில் விமானத்தில் ஏறும்போதும் கொரோனா இல்லை. சென்னையில் டெஸ்ட் எடுத்தபோதும் கொரோனா இல்லை. அவர் தனிமைப்படுத்தப்பட்டபோது என்ன நடந்தது என்று தெரியவில்லை. திடீரென அவருக்கு எப்படி உடல்நலம் சரியில்லாமல் போனது? அப்படியே உடல் நலம் சரி இல்லாமல் போனாலும் முதலில் எனக்கு தானே ஹோட்டல் நிர்வாகம் தகவல் தெரிவிக்க வேண்டும். இறந்து இரண்டு நாட்கள் ஆகியும் எந்தவித தகவலும் தராமல் இருப்பது ஏன்? எனது கணவர் சாவில் மர்மம் இருக்கிறது. எனது கணவரின் சாவிற்கு அரசும் தேனாம்பேட்டை ஓட்டல் நிர்வாகமும் தான் பதில் சொல்ல வேண்டும். ஒன்றரை வயது குழந்தையை வைத்து கொண்டு நான் என்ன செய்வேன். எனக்கு தாய்,தந்தை என வேறு எந்த உறவினர்களும் கிடையாது. என் கணவரை நம்பியே நானும் என்னுடைய குழந்தையும் இருக்கின்றோம். என் கணவரின் மரணத்திற்கு நீதி வேண்டும்’ என்று அவர் கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார். இந்த அபலைப் பெண்ணின் கண்ணீருக்கு அரசும் அந்த ஹோட்டல் நிர்வாகம் என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.