லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்தவர்களில் ஒருவர் தமிழர்: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Tuesday,June 16 2020]
இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் நேற்று இரவு திடீரென சீன துருப்புகள் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் இரண்டு ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.
கடந்த 1975ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சீனா போர் நடந்ததற்கு பின்னர் ஏற்பட்ட உயிரிழப்பு இதுதான் என்பதால், இருநாட்டு எல்லையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் இதுகுறித்து முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் பலியான மூவரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனி என்ற தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. வீரமரணம் அடைந்த பழனி கடந்த 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்திய சீன எல்லையில் நடந்த தாக்குதலில் பலியான ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்ற தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது