நான் பார்த்த விஜயகாந்தை கொண்டாடணும்னு இந்த படத்தை எடுத்தேன்: இயக்குனர் பச்சமுத்து..!

  • IndiaGlitz, [Wednesday,January 31 2024]

கார்த்திக் சுப்புராஜ் எப்படி ஒரு ரஜினிகாந்தின் தீவிர ரசிகரோ, லோகேஷ் கனகராஜ் எப்படி ஒரு கமல்ஹாசனின் ரசிகரோ, அது போல் நான் விஜயகாந்தின் தீவிர ரசிகன், நான் பார்த்து கொண்டாடிய விஜயகாந்துக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தான் இந்த படத்தை எடுத்தேன் என ’லப்பர் பந்து’ இயக்குனர் பச்சமுத்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இயக்குனர் பச்சமுத்து அளித்த பேட்டியில் கூறிய போது ’நான் சினிமாவுக்கு வந்த போது வியந்து பார்த்தது விஜயகாந்த் அவர்களை தான். எங்களை பொருத்தவரை அவர்தான் சூப்பர் ஸ்டார். அவருடைய படத்தை தான் நாங்கள் கூட்டம் கூட்டமாக வண்டியை எடுத்துக்கொண்டு போய் பார்த்தோம்.

நான் சினிமாவுக்கு வந்தவுடன் விஜயகாந்த் அவர்களை கொண்டாடும் வகையில், அவருக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தான் இந்த ’லப்பர் பந்து’ படத்தை இயக்கினேன்.

இந்த படத்தில் தினேஷ் விஜயகாந்தின் தீவிர ரசிகராக வருவார். படம் முழுவதிலும் கேப்டன் ரெஃபரன்ஸ் இருக்கும். விஜயகாந்தின் பாடல்கள், விஜயகாந்தின் படங்கள் என ரொம்ப நிறைவாக இந்த படம் அமைந்துள்ளது. இந்த படத்தை இயக்கி முடித்தவுடன் விஜயகாந்த்தை நேரில் பார்க்க முயற்சித்தேன். உடல் நலம் சரியில்லாததால் அவரை பார்க்க எனக்கு அனுமதி கிடைக்கவில்லை, ஆனால் அதற்குள் அவர் மறைந்துவிட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

ஆனால் அதே நேரத்தில் விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த படம் இருக்கும் என்று ’லப்பர் பந்து’ குறித்து இயக்குனர் பச்சமுத்து கூறியுள்ளார்.