ஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை - பஞ்சாப் எப்படிக் கிடைத்தது இந்த வெற்றி?
Send us your feedback to audioarticles@vaarta.com
அடுத்தடுத்து மூன்று தோல்விகளால் கடும் விமர்சனங்களைச் சந்தித்துவந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று கம்பீரமாக வெற்றிப் பாதைக்குத் திரும்பியது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
வலுவான தொடக்கம்
டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ராகுல் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணிக்கு ராகுல், மயங்க் அகர்வால் வழக்கம்போல நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். ஒருபுறம் அகர்வால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபுறம் ராகுல் அதிரடியாக ரன்கள் சேர்த்தார். மயங்க் அகர்வால் 26 ரன்கள் எடுத்த போது பியூஷ் சாவ்லா சுழலில் வெளியேறினார்.
இரட்டை அடி
பின் வந்த மந்தீப் (27) நிலைக்கவில்லை. அடுத்து வந்த பூரன் 17 பந்தில் 3 சிக்சர் ஒரு பவுண்டரி என அதிரடியாக 33 ரன்கள் சேர்த்து சார்துல் வேகத்தில் அவுட்டானார். அடுத்த பந்தில் ராகுல் (63) வெளியேறினார். இதையடுத்து பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்தது.
மிரட்டல் அடி
கடந்த சில போட்டிகளாக சென்னை அணியின் படுமோசமான துவக்கத்தைப் பார்த்துச் சலித்துப்போன சிஎஸ்கே ரசிகர்களுக்கு இம்முறை ஷேன் வாட்சன், ஃபாஃப் டூ பிளஸி ஜோடி இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. களத்தில் நிலைத்து நின்று இருவரும் சென்னை அணிக்கு அசைக்க முடியாத அடித்தளம் அமைத்தனர். அந்த அடித்தளத்தின் மேல் இன்னிங்ஸைக் கட்டி எழுப்பும் பொறுப்பையும் அவர்களே ஏற்றுக்கொண்டு கடைசிவரை நின்று வென்று திரும்பினர்.
கட்டாய வெற்றியின் நெருக்கடியை உணர்ந்த இந்த ஜோடி, தொடக்கத்திலேயே விக்கெட் விழுவதால் ஏற்படும் நெருக்கடியை உணர்ந்து ஜாக்கிரதையாக ஆடியது. அதே நேரம், சீரான இடைவெளியில் பவுண்டரிகள் விளாசவும் தவறவில்லை.
தோல்விடைந்த ராகுல்
இந்த ஜோடியைப் பிரிக்க பஞ்சாப் அணி கேப்டன் ராகுல் எடுத்த அத்தனை முயற்சியும் தோல்வியையே கண்டது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சனும் டூ பிளஸியும் அடுத்தடுத்து அரைசதம் கடந்து மிரட்டினர். இதன் பிறகும் பஞ்சாப் பவுலர்களின் பந்து வீச்சை இருவரும் பஞ்சு பஞ்சாக்கினர். டூ பிளஸி ஒரு பக்கம் அசைக்க முடியாம்ல் ஆட மறுபக்கம் வாட்சன் அசராமல் பவுண்டரிகளாகப் பறக்கவிட்டார்.
ஒரு கட்டத்தில் பஞ்சாப் பவுலர்கள் சோர்வடைந்தது கண் கூடாகவே தெரிந்தது. வாட்சனுக்கு இணையாக டூ பிளஸியும் வேகம் எடுக்க சென்னை அணி வெற்றியை நோக்கி வேகமாக நகர்ந்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாட்சன் (83), டூ பிளஸி (87) கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.
திருப்பம் தந்த தாகூர்
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சார்துல் தாகூர் போட்டிக்கு மிகப் பெரிய திருப்பம் அளித்தார். இவர் வீசிய போட்டியின் 18ஆவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் அதுவரை பஞ்சாப் அணிக்கு அதிரடியாக ரன்கள் சேர்த்துவந்த நிகோலஸ் பூரன், கே.எல் ராகுல் ஆகியோரை வெளியேற்றினார். அடுத்த பந்தை சர்ஃப்ராஸ் தடுத்து ஆட சார்துலின் ஹாட்ரிக் வாய்ப்பு பறிபோனது. இருந்தாலும் இது போட்டியில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய ஓவராக அமைந்தது.
தன்னம்பிக்கை, முனைப்பு, எச்சரிக்கை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்கும்போதெல்லாம் அனைவரும் அதைக் கடுமையாக விமர்சிப்பார்கள். அணியில் யாரெல்லாம் இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்றெல்லாம் யோசனை சொல்வார்கள். தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் தோற்றதும் விமர்சனங்கள் குவிந்தன. ஆனால், சென்னை அணி தன் மீது வைத்திருந்த தன்னம்பிக்கையைச் சிறிதும் இழந்துவிடவில்லை. அக்டோபர் 2ஆம் தேதி தோற்ற அதே அணியுடன் களமிறங்கிய செயலே அதன் தன்னம்பிக்கையைக் காட்டியது. அந்தத் தன்னம்பிக்கைக்கு ஏற்ப அணியினர் முனைப்புடன் செயல்பட்டனர். தவறுகள் களையப்பட்டு, பந்து வீச்சும் களத் தடுப்பும் வலிமையுடன் வெளிப்பட்டன.
"நாங்கள் ஒரே தவறுகளைத் திரும்பத் திரும்பச் செய்கிறோம்” என்ரு தோனி கடந்த போட்டி முடிந்ததும் சொன்னார். பழைய தவறுகளைச் செய்யக் கூடாது என்னும் எச்சரிக்கை ஒவ்வொருவரிடத்திலும் தெரிந்தது. குறிப்பாக வாட்சனும் டூ பிளஸியும் தொடக்கத்திலேயே விக்கெட் விழுந்துவிடக் கூடாது என்னும் எச்சரிக்கையுடன் ஆடினார்கள். அதே நேரம் எச்சரிக்கை என்னும் பெயரில் ரன் ரேட் முடங்கிவிடாமல் பார்த்துக்கொண்டார்கள்.
கேட்சில் செஞ்சுடி அடித்த தோனி
இப்போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுலுக்கு கேட்ச் பிடித்த சென்னை கேப்டன் தோனி, ஐபிஎல் அரங்கில் தனது 100ஆவது கேட்ச்சைப் பதிவு செய்தார். இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் அதிக கேட்ச்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்தார். இப்பட்டியலில் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் (103 கேட்ச்சுகள்) முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது ஜோடி
பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை அணியின் துவக்க வீரர்களான வாட்சன், டூ பிளஸி முதல் விக்கெட்டுக்கு 181 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்த இரண்டாவது ஜோடி என்ற பெருமை பெற்றனர். முன்னதாக ஷார்ஜாவில் நடந்த போட்டியில் கிங்ஸ் லெவன் அணியின் ராகுல், அகர்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள் சேர்த்தனர்.
சுருக்கமான ஸ்கோர்
பஞ்சாப்: 178/4 (20 ஓவர்கள்)
சென்னை: 181/0 (17.4 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: ஷேன் வாட்சன்
Picture Courtesy: IPLT20.COM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com