குவைத்தின் புதியச் சட்டத்திருத்தம்: இந்தியர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்கா தன் நாட்டில் உள்ள வேலை வாய்ப்புக்களை தனது மக்களுக்கே கொடுக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி H-1B விசாக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதைவிட பல மடங்கு முன்யோசனையில் தற்போது குவைத் அரசு செயல்பட்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு பணியாளர்களை குறைக்கும் வகையிலான புதிய மசோதாவிற்கு நேற்று குவைத் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியிருக்கின்றனர். இந்தப் புதியச் சட்டத்திருத்தத்திற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் நடைமுறைக்கு வந்துவிடும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.
ஒருவேளை குவைத் நாட்டில் நிறைவேற்றப் பட்டுள்ள புதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அந்நாட்டில் வேலைப் பார்த்துவரும் வெளிநாட்டு பணியாளர்களின் வேலை வாய்ப்புக்கு கடும் பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அரபு நாடுகளுக்கு வேலை வாய்ப்பைத் தேடிச் செல்லும் பெரும்பலான இந்தியர்கள் குவைத்தில் தான் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். பல ஆண்டுகளாக குவைத்துக்கும் இந்திய பணியாளர்களுக்கும் இடையே ஒரு உணர்வு பூர்வமான பந்தம் ஏற்படும் வகையில் அந்நாட்டில் இந்தியப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் குவைத் அரசாங்கத்தின் புதிய சட்டத்திருத்தம் நிறைவேற்றப் பட்டால் நிலைமை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் அங்கேயே நிரந்தரமாக தங்கியிருக்கும் இந்தியர்களின் நிலைமை என்ன என்பது குறித்த தெளிவான அறிக்கையும் இதுவரை வெளியாக வில்லை. குவைத் நாட்டில் இதுவரை 70 விழுக்காட்டிற்கும் அதிகமான வெளிநாட்டு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் கணிசமானோர் இந்தியர்கள். தற்போது இந்த விழுக்காட்டில் 30 சதவீதம் பேரை குறைக்க இருப்பதாக புதியச் சட்ட வரைவு திருத்த மசோதா குறிப்பிடுகிறது. இதனால் குவைத்தில் தங்கி வேலை பார்க்கும் 8 லட்சம் இந்தியர்களின் நிலைமையை குறித்து இந்திய அரசு குவைத்தின் வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தால் குவைத்தில் வேலை வாய்ப்புகள் குறைந்து இருக்கிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கிறோம் என்று அந்நாட்டின் பிரதமர் ஷேக் சபா கூறியதாக குவைத் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது. இந்நிலையில் குவைத்தில் வெளிநாட்டு பணியாளர்கள் அதிகமாக பணியாற்றி வருகின்றனர். இந்தச் சமநிலையற்ற தன்மை எதிர்காலத்தில் பெரும் சிக்கலாக மாறும் என பிரதமர் கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது. இந்தியர்கள் அந்நாட்டில் சமையல், வீட்டுப் பராமரிப்பு, கட்டிட வடிவமைப்பு போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இந்த வேலை வாய்ப்பு சொந்த மக்களுக்கு உறுதிச் செய்யப்படும் பட்சத்தில் நிலைமையை சமாளிக்க முடியும் என நம்புவதாக குவைத்தின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்தியர்கள் மட்டுமல்ல பாகிஸ்தான், எகிப்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் பணியாளர்களும் குவைத்தில் அதிகளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களைக் காட்டிலும் இந்தியர்கள்தான் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டின் அந்நிய செலவாணியில் குவைத்தில் உள்ள இந்தியர்களின் பங்கு 4.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அங்கு நிரந்தரமாக தங்கிவாழும் இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற்றப் படுவார்களா என்பதைக் குறித்தும் தற்போது அச்சம் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com