ஒரு நடிகராக தன் திறமையை பல்வேறு படங்களில் நிரூபித்திருக்கும் அருண் விஜய் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகனாகவும் முதல் முறையாக போலீஸ அதிகாரியாகவும் நடித்திருக்கும் படம் ‘குற்றம் 23’. ’ஈரம்’, ‘வல்லினம்’ போன்ற விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படங்களை இயக்கிய அறிவழகன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படம் எப்படி இருக்கிறது என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.
ஒரு கர்ப்பிணிப் பெண் ஜெஸ்ஸிகா (மியா கோஷல்) தேவாலயத்தில் பாவமன்னிப்பு கேட்க வருகிறார். அப்போது பாதிரியார் கொல்லப்பட, அந்தப் பெண்ணை சிலர் துரத்திக்கொண்டு ஓடுகின்றனர். ஜெச்சிகா தொலைந்துபோன வழக்கை விசாரிக்கத் தொடங்குகிறான் அசிஸ்டெண்ட் கமிஷனர் வெற்றிமாறன் (அருண் விஜய்).
பாதிரியார் கொலையைப் பார்த்த ஒரே தென்றல் (மஹிமா நம்பியார்) மீது காதல் வயப்படுகிறான் . ஒரு மழலையர் பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் தென்றல் மூலம் வழக்குக்கான சில முக்கிய துப்புகள் கிடைக்கின்றன.
திருமணம் ஆகி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிமாறனின் அண்ணி (அபினயா) கர்ப்பம்தரிக்கிறாள். ஆனால் தீடீரென்று அவளும் இன்னும் ஒன்றிரண்டு கர்ப்பிணிப் பெண்களும் அடுத்தடுத்து இறக்கின்றனர்.
இந்தக் மரணங்களின் பின்னணியைத் தேடிச் செல்லும் வெற்றிமாறன் அதற்குப் பின்னால் ஒரு மிகப் பெரிய மருத்துவத் துறை சார்ந்த குற்றம் சம்பந்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்து குற்றவாளிகளை எப்படி வீழ்த்துகிறான் என்பதே மீதிக் கதை.
கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் கதைக்கு அவரது நாவல்களைப் படிப்பது போன்ற பரபரபப்பு மிக்க திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் அறிவழகன். படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள்தான். அதிலும் ஒரு பாடல்,கதையுடன் சேர்ந்தே நகர்கிறது. எனவே திசைதிருப்பல்கள் மிக மிகக் குறைவு. படம் முழுவதும் குற்ற விசாரணை அது தொடர்பான சஸ்பென்ஸ் முடிச்சுகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்வது என சுவாரஸ்யமாக நகர்ந்து செல்கிறது.
இவற்றோடு கர்ப்பம்தரிக்க முடியாத பெண்களுக்கு குடும்பத்தினர் மற்றும் சுற்றியுள்ள சமூகத்தால் ஏற்படும் மன உளைச்சல் தொடர்பான எமோஷனல் விஷயங்களும் சரியான தாக்கம்செலுத்தும் வகையில் பதிவாகியிருக்கின்றன.
அசத்தலான மேக்கிங் படத்தின் பெரும்பலம். திரைக்கதையில் இருக்கும் சில குறைகளைக்கூட படமாக்கப்பட்ட விதம் மறைத்துவிடுகிறது. ஒளிப்பதிவாளர் பாஸ்கரன் கே.எம். கண்னைக் கவரும் விஷுவல்கள், கச்சிதமான ஒளிக்கலவை ஆகியவற்றைப் பயன்படுத்தி மிகச் சிறந்த பணியை செய்திருக்கிறார். எடிட்டர் புவன் ஸ்ரீநிவாசனும் திரைக்கதையின் பரபரப்புக்கு ஈடுகொடுத்திருக்கிறார். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை பிரமாதம். பாடல்களும் கேட்கும்படி உள்ளன.
அருண் விஜய் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான உடல்கட்டுடன், ஆக்ஷன், காதல், எமோஷனல் என பலவிதமான காட்சிகளில் சிறப்பான நடிப்பால் மனதைக் கவர்கிறார். இந்தப் படம் அவரை நிச்சயம் விரும்பிய உயரத்துக்குக் கொண்டு செல்லும் என்று சொல்லலாம். அவரது திறமைக்குத் தீனி போடும் வகையில் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார் ஸ்டண் சில்வா.
மஹிமாநம்பியார் அழகாக இருக்கிறார் நடிப்புக்குப் பெரிய வேலை இல்லை என்றாலும் பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பில் குறைவைக்கவில்லை.
கர்ப்பம்தரிக்க முடியாத ஏக்கத்தையும், கர்ப்பம் தரித்தபின் ஒரு தர்மசங்கடமான சூழலில் சிக்கிவிட்ட பரிதவிப்பையும் மிகக் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் அபினயா. மருத்துவராக வரும் கல்யாணி நடராஜன் குறிப்பிட்டு சொல்லத்தக்க நடிப்பை வழங்கியிருக்கிறார். தம்பி ராமையா தொடக்க காட்சிகளில் சிரிப்பே வரவைக்காத காமெடி வசனங்களால் வெறுப்பேற்றினாலும் பிற்பாதியில் நடிப்புக்கான ஸ்கோப்பை சிறப்பாக பயன்படுத்தி ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக அருண் விஜய்யைக் ஒரு இக்கட்டான கட்டத்திலிருந்து காப்பாற்றும் அந்தக் காட்சியில் அரங்கமே அவருக்காக கைதட்டுகிறது.
வில்லன்களில் மனதில் நிக்கும் நடிப்பைத் தந்திருக்கிறார் அரவிந்த் ஆகாஷ். மெயின் வில்லனாக வரும் வம்சி இறுதி சண்டைக் காட்சியில் மட்டுமே கொஞ்சம் ஸ்கோர் செய்கிறார்.
படத்தில் போலீஸ்காரராக வரும் அருண் விஜய், குற்றத்துக்கான ஆதாரங்களை, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தன் புத்திசாலித்தனத்தையும் சாதுர்யத்தையும் பயன்படுத்தி மிகக் குறைவே. அனைத்தும் அந்த பாத்திரத்தின்/திரைக்கதை ஆசிரியரின் வசதிக்கு ஏற்ப நடந்துவிடுவதுபோல் உள்ளது ஆகப் பெரிய குறை.
ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனர் வீட்டில் அவ்வளவு சாதாரணமாக உள்ளே புகுந்து ஒருவரைக் கொன்று விடமுடியுமா என்பது போன்ற லாஜிக் கேள்விகள் ஆங்காங்கே தொக்கி நிற்கின்றன.
மேலும் படத்தில் ஒரு முக்கியமான பிரச்சனையும் மோசமான குற்றமும் பேசப்பட்டிருந்தாலும் வலுமிக்க வில்லன் யாரும் இல்லை. மெயின் வில்லன் செய்யும் செயல்கள், அவனது மிரட்டல்களுக்கு அனைவரும் அடிபணிவது ஆகியவற்றுக்கு வலுவான காரணங்கள் சொல்லப்படவில்லை.
இந்தக் குறைகளையெல்லாம் சரிசெய்திருந்தால் இன்னும் சிறப்பான படமாக இருந்திருக்கும் ‘குற்றம் 23’. இருந்தாலும் பரபரப்பான ஆக்ஷன்காட்சிகள், அசத்தலான மேக்கிங், அருண் விஜய்யின் நடிப்பு ஆகியவற்றுக்காகவே இந்தப் படத்தை நிச்சயமாகப் பார்க்கலாம்.
மதிப்பெண்- 2.75/5
Comments