எச்.ராஜாவை வெளுத்து கட்டிய குஷ்பு

  • IndiaGlitz, [Tuesday,March 06 2018]

இன்று காலை முதல் ஊடகங்களுக்கு கிடைத்த பரபரப்பான தீனி, எச்.ராஜா தனது முகநூலில் பதிவு செய்த பெரியார் சிலை குறித்த கருத்துதான். மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு விருந்தாக அமைந்த இந்த பதிவால் சமூக இணையதளங்கள் பரபரப்பில் உள்ளன. ஒட்டுமொத்த அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாகவும், தனது சொந்த கட்சியில் இருந்தே வெளிப்பட்ட அதிருப்தி காரணமாகவும் எச்.ராஜா அந்த கருத்தை நீக்கிவிட்டார்.

ஆனால் எச்.ராஜாவை சமூக வலைத்தள பயனாளிகள் விடுவதில்லை. இந்த நிலையில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, எச்.ராஜாவின் பதிவிற்கு காட்டமான பதிலடியை கொடுத்துள்ளார். எச்.ராஜாவை எச்சை ராஜா என வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ள குஷ்பு, அவரை நேரடியாக கண்டித்து கேட்கும் திராணி, முதுகெலும்பில்லாத அதிமுக அரசுக்கு இல்லை என்றும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரஜினி, கமல் பற்றி கருத்து கூறும் அதிமுக அமைச்சர்கள், இதுகுறித்து பேசாத கோழைகளாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி  எச்.ராஜாவின் இந்த கருத்து அவருடைய சொந்த கருத்து என்று பாஜக ஒதுங்கிவிடாமல் அவரை கட்சியில் இருந்து நீக்க நரேந்திரமோடி மற்றும் அமித்ஷா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெறுமனே சஸ்பெண்ட் செய்யக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். குஷ்புவின் கருத்துக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.