பாஜகவில் இணைவதாக எழுந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த குஷ்பு!
- IndiaGlitz, [Monday,October 05 2020]
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்து வரும் நடிகை குஷ்பு கடந்த சில நாட்களாக பாஜகவில் இணைய இருப்பதாக வதந்திகள் பரவியது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து அவர் டுவிட் செய்ததும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது அவர் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்ததும் இந்த வதந்திகளுக்கு காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாஜகவின் துணை தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவின் முக்கிய பிரபலம் ஆசீர்வாதம் ஆச்சாரி ஆகியோர்கள் குஷ்பு பாஜகவுக்கு வரவேண்டும் என்றும், குஷ்பு போன்ற தைரியமான பெண்கள் பாஜகவிற்கு வந்தால் அரசியலுக்கு வரும் பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்றும் தெரிவித்தனர். இதனை அடுத்து பாஜகவில் குஷ்பு இணைய இருப்பதாக வதந்திகள் அதிகமாகிக் கொண்டே வந்தன.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹாத்ராஸ் என்ற பகுதியில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தாக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்தும் இன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு பங்கேற்று பங்கேற்றார். நடிகை குஷ்பு இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் அவர் பாஜகவில் இணையவிருப்பதாக கூறப்பட்ட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்று கருதப்படுகிறது.