சரமாரியாக கேள்வி கேட்ட சிறுமிக்கு சளைக்காமல் பதில் சொன்ன குஷ்பு!

  • IndiaGlitz, [Thursday,March 25 2021]

நடிகை குஷ்பு சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில் அவருக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த தொகுதியில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நடிகை குஷ்பூ தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்

குறிப்பாக பெண்களை கவரும் வகையில் அவர் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார் என்பதும் இதனால் பெண்கள் வாக்குகள் அவருக்கு பெருவாரியாக கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள ஒரு பகுதிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தபோது அங்கு இருந்த சிறுமி ஒருவர் குஷ்புவிடம் ஆங்கிலத்தில் சரமாரியாக கேள்வி எழுப்பினார். ‘எங்கள் தொகுதிக்கு என்ன மாதிரியான வாக்குறுதிகளை உங்களிடமிருந்து எதிர் பார்க்கலாம்? தேர்தல் நேரத்தில் மட்டும் தான் அரசியல்வாதிகள் இங்கு வருகிறார்கள், அதன்பிறகு எங்கள் தொகுதி பக்கமே வர மாட்டேன் என் கிறார்கள். எங்கள் தொகுதிக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அந்த சிறுமியின் கேள்விக்கு சிரித்த முகத்துடன் பதில் கூறிய குஷ்பூ ’என்னுடைய இரண்டு குழந்தைகளும் இந்த தொகுதியில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் தான் படித்தார்கள். இந்த ஏரியாவில் சுனாமி மற்றும் வெள்ளம் வந்தபோது பல உதவிகள் செய்து உள்ளேன். ஆனால் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று என்னுடைய அம்மா சொல்லிக் கொடுத்து இருக்கிறார் என்பதால் இதுவரை நான் அதை விளம்பரம் செய்தது கிடையாது. சென்னை வெள்ளத்தின் போது இந்த பகுதி மக்கள் அனைவருக்கும் 21 நாட்கள் உணவு கொடுத்து உள்ளேன். நான் முதல் முறையாக இந்த தொகுதியில் போட்டுயிடுகிறேன். மற்ற அரசியல்வாதிகள் போல் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து செல்லும் அரசியல்வாதியாக நான் இருக்க மாட்டேன் என்பதை உறுதி அளிக்கிறேன். என்னிடம் கேள்வி கேட்க உங்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது. எந்த கேள்வி கேட்டாலும் அதற்குரிய பதிலை தருவேன். இந்த தொகுதியை மேம்படுத்த பாடுபடுவேன்’ என்று கூறினார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது