குப்பத்து ராஜா: பெயரில் மட்டுமே ராஜா
ஜிவி பிரகாஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'குப்பத்து ராஜா' படம் எப்படி உள்ளது என்பதை இப்போது பார்ப்போம்
வடசென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் ராக்கெட் (ஜிவி பிரகாஷ்) தலைமையில் ஒரு பாண்டவர் டீம், எம்.ஜி.ராஜேந்திரன் (பார்த்திபன்) தலைமையில் ஒரு கெளரவர் டீம். இரண்டு டீம்களும் அடிக்கடி மோதிக்கொள்வதுண்டு. இந்த நிலையில் பார்த்திபன் டீமில் உள்ள ராக்கெட்டின் தந்தை ஊர்நியாயம் (எம்.எஸ்.பாஸ்கர்) திடீரென மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். தந்தையை கொலை செய்தவனை ஜிவி பிரகாஷ், பார்த்திபனுடன் சேர்ந்து கண்டுபிடித்து பழிவாங்குவதுதான் கதை
வடசென்னை இளைஞர், சென்னை பாஷை பேசுபவர், பார்த்திபனுடன் அவ்வப்போது மோதுபவர், தந்தையிடம் ஒன்றாக சேர்ந்து சரக்கடித்து பாசத்தை வெளிப்படுத்துபவர், பாலக் லால்வானியுடன் காதல், பூனம் பாஜ்வாவுடன் ஒரு ஈர்ப்பு, யோகிபாபுவுடன் காமெடி என படம் முழுவதும் ஜிவி பிரகாஷ் தனது நடிப்பை முடிந்தவரை வெளிப்படுத்தியுள்ளார்.
நாயகி பாலக் லால்வானி துறுதுறுவென உள்ளார். ஹோம்லி லுக் என்பதால் தமிழ் சினிமாவுக்கு ஒரு நடிக்க தெரிந்த நாயகி கிடைத்து விட்டார் என்று சொல்லலாம். ஆனால் வசன உச்சரிப்புக்கும் உதட்டசைவுக்கும் சம்பந்தமே இல்லை.
பூனம் பாஜ்வா இந்த படத்தின் கதைக்கு எதற்காக தேவை என்று யாராவது கண்டுபிடித்து சொன்னால் அவருக்கு ஒரு சிறப்பு பரிசை கொடுக்கலாம். தொப்புள் தெரியும் சேலை, தோள் தெரியும் ஜாக்கெட் மட்டுமே இவருடைய பிளஸ். யோகிபாபுவின் ஒன்லைன் காமெடியும் இந்த படத்தில் எடுபடாதது பரிதாபமே.
திறமையான நடிகரான பார்த்திபனையும் வேஸ்ட் ஆக்கியுள்ளனர். அவர் நல்லவரா? கெட்டவரா? வில்லனா? நாயகனுக்கு உதவி செய்பவரா? என்று யோசிப்பதற்குள் படம் முடிந்து விடுகிறது. போதைக்குறைக்கு இவரை எம்.ஜி.ஆர் ரசிகர் என்று வேறு காட்டி கொடுமைப்படுத்துகின்றனர். ஜாங்கிரி மதுமிதா நடிப்பு மட்டும் படத்திற்கு ஒரு ஆறுதல். எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம்போல் தனது குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தந்தை-மகன் உறவு குறித்து தனது நண்பரிடம் இவர் பேசும் ஒரு வசனம் கைதட்டலை பெறுகிறது.
ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமார் ரகம். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு வடசென்னையை திரையில் கொண்டு வருவதில் வெற்றி கண்டுள்ளது. எடிட்டர் பிரவீன் இந்த படத்தில் உள்ள தேவையில்லாத காட்சிகளை வெட்டினால் படம் மொத்தம் அரை மணி நேரம் கூட தேறாது என்பதால் எடிட் செய்யாமல் விட்டுவிட்டார் போல் தெரிகிறது.
நடன இயக்குனரான பாபா பாஸ்கர் இயக்குனராக புரமோஷன் ஆகியுள்ளார். ஆனால் பாஸ் ஆனரா? என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும். இடைவேளைக்கு முந்தைய காட்சியில் எம்.எஸ்.,பாஸ்கர் கொல்லப்படுகிறார். அதுவரை ஒரே ஒரு காட்சியாவது படத்தில் தேறுமா? என்பது சந்தேகமே. இரண்டாம் பாதியில் குப்பத்தில் நடக்கும் சில க்ரைம் சம்பவங்களை கோர்த்து கதை சொல்ல முயற்சித்திருக்கின்றார். ஆனால் காட்சிகள் கோர்வையாக இல்லாததால் ரசிக்க முடியவில்லை. வடசென்னை பேச்சும் இயல்பாக இல்லை. பல காட்சிகள் நாடகம் போல் இருப்பதும், குப்பத்தில் நடப்பவற்றை மிகைப்படுத்தி காட்டியிருப்பதும் மிகப்பெரிய மைனஸ். சிறுவனின் கொலை, எம்.எஸ்.பாஸ்கர் கொலை, ஆகிய கொலைக்கான காரணம் மற்றும் திடீர் திடீரென அறிமுகமாகும் வில்லன்கள் என திரைக்கதையில் பயங்கர குழப்பம்.
மொத்தத்தில் இயக்குனர் பாபா பாஸ்கர் தனக்கு தெரிந்த நடன இயக்குனர் தொழிலில் முழு கவனம் செலுத்துவது அவருக்கு நல்லதோ இல்லையோ, படம் பார்க்கும் ரசிகர்களுக்கு நல்லது. இந்த படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்பவர்கள் நேரடியாக இரண்டாம் பாதியை மட்டும் பார்த்தால் போதுமானது.
Comments