பூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய்ப்படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,April 16 2018]

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் முதல் சமீபத்தில் 'சவரக்கத்தி' படம் வரை நடித்த நடிகை பூர்ணா நடிக்கும் அடுத்த படம் பிரமாண்டமான பேய்ப்படமாக தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'குந்தி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அபினவ், பூர்ணா ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தில் ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் , பேபி தன்வி, பேபி கிருத்திகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கர்ணா ஒளீப்பதிவில், யஜமன்யா இசையில் உருவாகி வரும் இந்த படத்தை பண்ணாராயல் என்பவர் இயக்கியுள்ளார். தெலுங்கில் இந்த படம் ராட்சஷி என்ற பெயரில் வெளீயாகி நல்ல வெற்றி பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படம் குறித்து படத்தின் வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு பணியில் இருந்த ஏ.ஆர்.கே. ராஜராஜா அவர்கள் கூறியதாவது: தெலுங்கில் ராட்ஷஷி என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றியை கண்ட இந்த படமே தமிழில் “ குந்தி “ என்ற பெயரில் தயாரித்து வருகிறோம்.

தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் பூர்ணாவின் வாழ்வில் திடீரென ஒரு அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடக்கிறது. ஒரு பேய் தனது குழந்தைகளை கொல்ல துடித்துக்கொண்டிருக்க அந்த பேயிடமிருந்து எப்படி குழந்தைகளை காப்பாற்றினார் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

அருந்ததி, சந்திரமுகி, முனி, காஞ்சனா போன்ற படங்களை மிஞ்சும், தமிழ் சினிமாவின் அடுத்த பிரமாண்டமான பேய் படமாக இந்த குந்தி இருப்பாள்.

முப்பது நிமிடம் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பாகவும், திகிலாகவும் இருக்கும். இதுவரை பேய் படங்களில் நடித்த பிரபலங்களை மிஞ்சும் அளவிற்கு இந்த படத்தில் பூர்ணா தனது நடிப்பு திறமையை வெளிபடுத்தி இருக்கிறார். இந்த படம் அவரது திரையுலக வாழ்கையில் ஒரு மைல்கல் என்பதில் எந்த ஐயமும் இல்லை. விரைவில் அனைவரையும் பயத்தில் உறைய வைக்க வருகிறாள் இந்த “ குந்தி “ என்று A.R.K.ராஜராஜா கூறியுள்ளார்.