கும்பமேளாவில் குளறுபடி… 1 லட்சம் போலி கொரோனா முடிவுகள் வெளியானதாகப் பகீர் தகவல்!
- IndiaGlitz, [Tuesday,June 15 2021]
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தைத் தொட்டபோது உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஆண்டுதோறும் 3 மாதம் கொண்டாடப்படும் இந்த விழா கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு வெறும் 30 நாட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
இப்படி நடந்த கும்பமேளாவில் 10 நாட்களைக் கடந்தப்பின் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது. இதனால் அரசு, 22 தனியார் கொரோனா பரிசோதனை நிலையங்களை ஏற்படுத்தி கும்பமேளாவிற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் கொரோனா பரிசோதனையை நடத்தியது. இப்படி நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி கொரோனா பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் கும்பமேளா நிகழ்வுகள் தற்போது இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தியபோது ஒரே செல்போன் எண்ணில் 50க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை விவரங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் இதனால் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை மாதிரிகளுக்குப் போலியான முடிவுகள் அறிவிக்கப் பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
அதோடு நாள் ஒன்றிற்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்குக் கொரோனா பரிசோதனையைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்தக் கொரோனா பரிசோதனையில் முறையான விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் 1 -30 வரை நடைபெற்ற கும்பமேளா நிகழ்ச்சியில் 70 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதாக அம்மாநில அரசு தகவல் வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.