கோயில் கும்பாபிஷேகங்களில் இனி தமிழ் இடம்பெறுமா??? முடிவுக்கு வரவிருக்கும் விவாதம்!!!
- IndiaGlitz, [Friday,December 04 2020]
தமிழகத்தில் அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் அனைத்துக் கோவில் கும்பாபிஷேகங்களிலும் இனி தமிழ் பாடல்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டு உள்ளனர். இறுதித் தீர்ப்பு வழங்கப்படாத ஒரு வழக்கில் இப்படி உத்தரவிட்ட நீதிபதிகள் மேலும் விரிவான உத்தரவுக்காக வழக்கை ஒத்தியும் வைத்து உள்ளனர். இதனால் இனி தமிழ் பாடல்களான தேவாரம், திருவாசகம் போன்றவை கோவில் கும்பாபிஷேகங்களின் போது பாடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
900 ஆண்டுகள் பழமையான கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவின்போது தமிழ் பாடல்களும் இடம்பெற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கரூரை சேர்ந்த ரமேஷ் என்ற இளஞ்செழியன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை முன்னதாக பதிவு செய்திருந்தார். அந்த வழக்கிற்கான விசாரணை நேற்று நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் “அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் கும்பாபிஷேக விழா நடந்தாலும் தமிழிலும் தேவாரம், திருவாசகம் போன்றவை பாடப்பட வேண்டும்” என்று கூறி விரிவான உத்தரவுக்காக வழக்கை ஒத்தி வைத்து உள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கோவில்களிலும் இனி தமிழ் பாடல்கள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.