கர்நாடகத்திற்கு வருமாறு ரஜினிகாந்துக்கு குமாரசாமி அழைப்பு
- IndiaGlitz, [Monday,May 21 2018]
கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தனது மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்துவிட்ட நிலையில் நாளை மறுநாள் புதிய முதல்வராக மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
இந்த நிலையில் நேற்று ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், 'கர்நாடகத்தில் பதவியேற்கவுள்ள புதிய அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த குமாரசாமி, 'கர்நாடகா அணைகளில் உள்ள நீர் நிலவரத்தை பார்வையிட வருமாறு ரஜினிகாந்தை அழைத்துள்ளேன். அணைகளில் உள்ள நீர் இருப்பு கர்நாடகாவிற்கே போதாத நிலையில் உள்ளது. கர்நாடக அணைகளின் நீர் நிலைமையை ரஜினிகாந்த் நேரில் வந்து பார்த்து புரிந்துகொள்வார் என நினைக்கிறேன். அதன் பிறகும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறினால் அதுகுறித்து பேசலாம்' என்று கூறினார்.
குமாரசாமியின் அழைப்பை ஏற்று ரஜினிகாந்த் கர்நாடக அணைகளின் நீர்நிலவரத்தை பார்வையிட செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்