சமந்தா விவாகரத்து விவகாரம்: முன்னாள் அமைச்சர் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்..!

  • IndiaGlitz, [Thursday,October 03 2024]

நடிகை சமந்தா விவாகரத்து குறித்து தெலுங்கானா மாநில அமைச்சர் சுரேகா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில், முன்னாள் அமைச்சர் கேடி ராமராவ், அமைச்சர் சுரேகாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளன.

தெலுங்கானா மாநில அமைச்சர் சுரேகா சமீபத்தில் அளித்த பேட்டியில், சமந்தா மீது முன்னாள் அமைச்சர் கே டி ராமராவ் விருப்பம் கொண்டதாகவும், அவரது ஆசைக்கு இணங்குமாறு நாகார்ஜுனா குடும்பம் சமந்தாவை வலியுறுத்தியதால் தான் சமந்தா தனது கணவரை பிரிந்து விட்டார் என்று கூறினார். இந்த ஜோடியின் பிரிவுக்கு கே டி ராமராவ் தான் காரணம் என்றும் அமைச்சர் சுரேகா குறிப்பிட்டார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமந்தா மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்டோர் அமைச்சருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்த நிலையில், தன் மீது அபாண்டமாக குற்றம் சாட்டியதாக சுரேகா கூறிய கருத்துக்கு, கே டி ராமராவ், அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், அமைச்சர் சுரேகா, எனது இமேஜை கெடுத்து விடும் வகையில் நடிகையுடன் தொடர்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறிய கருத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்; 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ’அமைச்சர் சுரேகா, என்னுடைய பெயரை அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தி உள்ளார், பதவியையும் அவர் தவறாக பயன்படுத்தி உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம், தெலுங்கானா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.