யாருக்கும் சம்பளம் இல்லை: புதிய முயற்சியில் விஜய்சேதுபதி-கே.எஸ்.ரவிகுமார்
- IndiaGlitz, [Friday,May 22 2020]
ஒரு திரைப்படம் வெற்றி அடைந்தால் அந்த படத்தின் தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், டெக்னீஷியன் உள்பட அனைவரும் லாபம் அடைவார்கள். ஆனால் அதே திரைப்படம் தோல்வி அடைந்தால் அந்த படத்தின் தயாரிப்பாளர் மட்டுமே நஷ்டம் அடைவார். நடிகர் நடிகைகள் டெக்னிஷியன் ஆகியோர்களுக்க்கு அவரவர் சம்பளம் கிடைத்துவிடுவதால் எந்தவித நஷ்டமும் அவர்களுக்கு ஏற்படுவதில்லை
இந்த நிலையை மாற்ற கோலிவுட் திரையுலகில் ஒரு புதிய முயற்சி தற்போது நடைமுறைக்கு வர உள்ளது. இதன்படி திரைப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர், டெக்னீசியன் உள்பட யாருக்கும் சம்பளம் கிடையாது. இரண்டு கோடி ரூபாய் படப்பிடிப்பிற்கு மட்டுமே செலவு செய்யப்படும். படப்பிடிப்புக்கு 30 நாட்களும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு 30 நாட்களும் என 60 நாட்களில் அந்த படம் முழுமையாக முடிவடைந்து திரையரங்குகளில் வெளியாகும்
இந்த படத்தின் ஒட்டுமொத்த வியாபாரத்தில் கிடைக்கும் தொகையை அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், இயக்குனர், டெக்னீஷியன்கள் என அனைவரும் அவரவர் தகுதிக்கேற்ப பிரித்துக்கொள்ள வேண்டும். இப்படி ஒரு புதிய முயற்சியாக ஒரு திரைப்படம் உருவாக உள்ளது. இந்த புதிய முயற்சியை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி செளத்ரி மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ஆகியோர் எடுக்கவுள்ளனர். இந்த படத்தில் முக்கிய வேடங்களில் சத்யராஜ், விஜய் சேதுபதி, பார்த்திபன் உள்பட பலர் நடிக்கிறார்கள் என்பதும் இந்த படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய முயற்சி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், படங்களின் வியாபார அடிப்படையில் சம்பளம் என்னும் புதிய திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் இதனால் தனிப்பட்ட தயாரிப்பாளர் மட்டும் முதலீடு செய்து லாப நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்காது என்றும் கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது