முத்தம் கொடுத்து வழியனுப்பிய க்ருனால் பாண்டியா… மொத்தமாகச் சரிந்த MI கனவு!

கடந்த 2019 க்கு பிறகு வான்கடே மைதானத்தில் நேற்று விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது. இதனால் 15 ஆவது சீசன் போட்டியில் தான் கலந்துகொண்ட 8 லீக் போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்து இருப்பது குறித்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நேற்றைய 37 ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இதில் முதலில் களம் இறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 168 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய மும்பை அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 36 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றிப்பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் தற்போதைய சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 2 ஆவது சதத்தை விளாசினார். அதில் 62 பந்துகளுக்கு 12 பவுண்ரிகள், 4 சிக்ஸர்கள் அடக்கம். இவரை தவிர குயின்டன் டி காக் 22 ரன்களை எடுத்திருந்தார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா 1 விக்கெட்டையும், பொல்லார்ட் 2 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

இந்நிலையில் லக்னோ நிர்ணயித்த 169 என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றைய போட்டியில் கடுமையாகப் போராடியது. 17 ஓவர் முடிவில் 119 ரன்களை எடுத்திருந்த அந்த அணி 5 ஓவர்களுக்கு 71 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் திலக் வர்மா அதிரடி காட்ட ஆரம்பித்தார். தொடர்ந்து மூத்த வீரரான பொல்லார்ட்டுடன் கூட்டணி சேர்ந்து விளையாடிய அவர் கடைசி 18 பந்துகள் இருக்கும்போது ஆட்டம் இழந்தார்.

அடுத்து 1 ஓவருக்கு மும்பை இந்தியன்ஸ் 39 ரன்களை எடுக்க வேண்டியிருந்த நிலையில் க்ருனால் பாண்டியாவின் முதல் பந்திலேயே பொல்லார்ட் விக்கெட்டை இழந்தார். இந்த விக்கெட்டின்போது க்ருனால் பாண்டியா பொல்லார்டின் காது பக்கமாகப் போய் முத்தம் கொடுத்து வழியனுப்பினார். காரணம் இதற்கு முன்பு க்ருனால் விக்கெட்டின்போது அவர் இப்படி செய்ததாகவும் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

கிரவுண்டிற்கு வெளியே நல்ல நண்பர்களாக இருக்கும் க்ருனால் மற்றும் பொல்லார்ட்டின் இந்த செய்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு விளையாட்டாக இருந்தாலும் சுனில் கவாஸ்கர் ஆட்டம் முடியாத நிலையில் இது ரசிக்கும்படியாக இல்லை என்று விமர்சித்து இருந்தார். தொடர்ந்து நேற்றைய போட்டியில் பொல்லார்ட் விக்கெட்டை அடுத்து க்ருனால் பாண்டியா மேலும் 2 விக்கெட்டுகளை எடுத்து தனது அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.