வெற்றிவேல் நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டார்: இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா
- IndiaGlitz, [Wednesday,December 20 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று காலை வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோ குறித்து இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா செய்தியாளர்களை சந்தித்து தனது கண்டனத்தை தெரிவித்து கொண்டார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் விசாரணை கமிஷனிடம் ஒப்படைக்கவே டிடிவி தினகரனிடம் இந்த வீடியோ கொடுக்கப்பட்டதாகவும், இந்த வீடியோ வெற்றிவேல் கையில் எப்படி வந்தது என்பது தனக்கு புரியவில்லை என்றும் கிருஷ்ணப்ரியா கூறினார். இந்த வீடியோவை வெளியிட்டு நம்பிக்கை துரோகம் செய்த வெற்றிவேல் மீது தினகரன் இதற்குள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், ஆனால் அமைதியாக இருப்பது மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
தன் மீது கொலைகாரி என்ற பழிவந்தபோது கூட சசிகலா இந்த வீடியோவை வெளியிட்டு தன்னை நியாயப்படுத்தி கொள்ள விரும்பவில்லை என்றும், இந்த வீடியோவை ஜெயலலிதாவின் சம்மதத்தின் பேரில் சசிகலாவே எடுத்த வீடியோதான் என்றும் கிருஷ்ணப்ரியா மேலும் கூறினார். இந்த வீடியோவை இந்த நேரத்தில் வெளியிட அவசியம் ஏன் என்றும், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு நிச்சயம் தினகரனிடம் நான் கேட்பேன் என்றும் கிருஷ்ணப்ரியா கூறியுள்ளார்.