ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரைச் சுற்றும் மர்மம்… நடப்பது என்ன?
- IndiaGlitz, [Wednesday,February 03 2021]
2036 வரை ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார் விளாடிமிர் புடின். இந்நிலையில் அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரும் ஊழல் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருபவருமான அலெக்ஸி நவால்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இவரது கைதுக்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து இருப்பதோடு ரஷ்யாவில் இவருக்கு ஆதரவான குரல்களும் வலுத்து வருகின்றன. இதனால் அலெக்ஸி நவால்னி தற்போது உலகம் முழுவதும் கவனிக்கப்படும் ஒரு அரசியல் தலைவராக மாறிவிட்டார்.
கடந்த செப்டம்பர் மாதம் தனது மனைவியோடு மாஸ்கோ நோக்கி விமானத்தில் பயணம் செய்த அலெக்ஸி திடீரென மயங்கி விழுந்து கோமாவிற்கு சென்றார். இதனால் பதறிப்போன அவரது மனைவி உடனே விமானத்தை தரையிறக்கி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்படி ஆம்ஸ்க் நகரில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் சந்தேகம் கொண்ட அலெக்ஸியின் மனைவி, உடனடியாக அவரை ஜெர்மனிக்கு அழைத்து செல்கிறார். ஜெர்மனியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் உயிர் பிழைக்கிறார். கூடவே அவருக்கு “நோவிசோக்” எனும் நச்சுமருந்து கொடுக்கப்பட்டதாக அறிக்கையும் வெளியாகியது.
இதையடுத்து ரஷ்யப் பாதுகாப்பு சேவை மீது கடும் குற்றம் சுமத்தப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த அலெக்ஸி தேநீர் அருந்தியதாகவும் அந்த தேநீரில்தான் இந்த நச்சு மருந்து கலக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ளாத ரஷ்ய அரசு ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு சேவையின் தலைவர் உட்பட 6 பேருக்கும் ஒரு வேதிப்பொருள் ஆராய்ச்சி நிலையத்துக்கும் தடை விதிக்கிறது.
இந்நிலையில் உடல் நலம் தேறிய அலெக்ஸி கடந்த ஜனவரி 17 ஆம் தேதி பெர்லினில் இருந்து மாஸ்கோ வருகிறார். அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தவுடன் அவரை போலீசார் கைது செய்கின்றனர். காரணம் இவர் மோசடி வழக்கில் பரோல் விதிமுறைகளை மீறினார் எனக் குற்றம் சாட்டப்பட்டது. இவரது கைதுக்கு ரஷ்யாவின் தலைநகரில் கடும் போராட்டம் வலுத்தது. இந்தப் போராட்டத்தில் எப்போதும் அலெக்ஸிக்கு ஆதரவளிக்கும் இளைஞர்கள் மட்டுமல்லாது வயதானவர்களும் கலந்து கொண்டனர். இதற்கு கொரோனா மற்றும் கடும் பொருளாதார வீழ்ச்சியாகக் கூட இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் பொதுப் பணத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்ற மோசடி வழக்கில் மாஸ்கோ நீதிமன்றம் அவருக்கு 31/2 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான சர்ச்சையின்போதே இவர் பல மாதம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். தண்டனையில் அந்த நாட்கள் கழித்துக் கொள்ளப்படும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது. இந்த தீர்ப்பை அடுத்து அலெக்ஸி சிறையில் அடைக்கப் பட்டார். இந்நிகழ்வுதான் தற்போது உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
காரணம் அலெக்சி தாராளத்திற்கு எதிரான அமைப்பை வழிநடத்தி வருபவர். மேலும் ஊழல் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவரது குற்றச்சாட்டால் பல அரசு அதிகாரிகளும் பதவி இழக்க நேரிட்டது. இதுதவிர அலெக்சி மீது சர்ச்சைகள் கிளப்புவதற்கு இன்னொரு முக்கியக் காரணம் இருப்பதாகவும் சிலர் கணித்து வருகின்றனர். முன்னதாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட அலெக்சி வரப்போகும் தேர்தலில் அனைத்து ஓட்டுகளும் புடினுக்கு எதிராக நிற்பவர்களுக்கு போய்ச்சேர வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வந்தார். இந்தப் பிரச்சாரம்தான் ரஷ்ய அரசாங்கத்தை எரிச்சல் அடைய செய்து இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இந்நிகழ்வுகளுக்கு பின்னால் ரஷ்ய அரசியலில் புதிய புரட்சி ஏற்படுமா? இந்தப் புரட்சிக்கு ஏற்ப அலெக்ஸியின் நடவடிக்கை இருக்கிறதா? என்பது போன்ற விவாதத்தையும் தற்போது சிலர் கிளப்பி உள்ளனர். ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் சில நிபுணர்கள் இந்த விவகாரம் மேல்மட்ட அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இடையே நடக்கும் அதிகார மோதலே தவிர, பெரிய அளவிற்கு புரட்சியை ஏற்படுத்தாது என்றும் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.