நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை கே ஆர் விஜயா நடிக்கும் “மூத்தகுடி”: இறுதிக்கட்ட படப்பிடிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நீண்ட இடைவெளிக்கு பிறகு மூத்த நடிகை கே ஆர் விஜயா நடிக்கும் “மூத்தகுடி” திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.
தி ஸ்பார்க்லாண்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குநர் ரவி பார்கவன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்ப பின்னணியிலான உணர்ச்சிகரமான திரைப்படம் “மூத்தகுடி”. நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூத்த நடிகை கே ஆர் விஜயா திரையில் மீண்டும் நடிக்கும் இப்படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
1970 களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் கதை 1970, 1990 மற்றும் நடப்பு காலகட்டத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் படக்குழு மிகுந்த ஆராய்ச்சி செய்து, அந்தந்த காலகட்டத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவந்துள்ளது. அப்போதைய காலகட்டத்தை மீண்டும் திரையில் பார்க்கும் ஒரு சிறந்த அனுபவமாக இப்படம் இருக்கும்.
மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூத்த நடிகை கேஆர் விஜயா அவர்கள் இப்படம் மூலம் மீண்டும் திரையில் தோன்றுகிறார். 'சாவி' படத்தின் கதாநாயகன் பிரகாஷ் சந்திரா இப்படத்தை தயாரிப்பதோடு, படத்தின் நாயகனாக நடித்துள்ளார். 'மாயாண்டி குடும்பத்தார்' படத்தின் கதாநாயகன் தருண்கோபி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக நாயகி அன்விஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், ராஜ் கபூர், சிங்கம்புலி, யார் கண்னண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குநர் ரவி பார்கவன் கூறியதாவது: நிஜத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது தான் இப்படம். உண்மை சம்பவத்தை மிக அழகான திரைக்கதையாக மாற்றியுள்ளேன். மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் அந்தந்த காலகட்டத்தில் பயன்படுத்திய பொருட்களை தேடிப்பிடித்து படத்தில் பயன்படுத்தியுள்ளோம். திரையில் நீங்கள் பார்க்கும் போது அந்த காலகட்டத்தில் வாழும் அனுபவத்தை தரும். மூத்த நடிகை கே ஆர் விஜயா அம்மா இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பின் போது கேரவனே வேண்டாம் படக்குழுவினருடன் இருக்கிறேன் என்று எப்போதும் படப்பிடிப்பில் தான் இருப்பார். எல்லோருடனும் வெகு இயல்பாக நட்புறவோடு பழகினார். அவரை மீண்டும் திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். நடிகர் தருண் கோபி எதிர் நாயகனாக கலக்கியுள்ளார், அவர் தந்த ஒத்துழைப்பு மிகப்பெரிது. பிரகாஷும் அவரும் சண்டைக்காட்சி நடிக்கும் போது அவருக்கு அடிப்பட்டுவிட்டது. ஆனால் அப்போது கூட, படக்குழுவின் சிரமத்தை உணர்ந்து, படப்பிடிப்பை முடித்து விட்டே சென்றார். படத்தில் நடித்தவர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். இப்படம் சமூகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்தும் ஒரு நல்லபடைப்பாக, ரசிகனுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்றார்.
“அசுரன்” திரைப்பட படப்பிடிப்பு நடந்த, கோவில்பட்டி, திருநெல்வேலி, சாத்தூர், கயத்தாறு, எட்டையபுரம் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் இசை,டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
முருகானந்தம் இசையில் ரவிசாமி ஒளிப்பதிவில் வளர் பாண்டி படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com