ஒரே நாளில் 500க்கும் மேல் பாதிப்பு எதிரொலி: கோயம்பேடு சந்தை மூடப்படுகிறது

  • IndiaGlitz, [Monday,May 04 2020]

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாக சற்றுமுன் வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 266 பேர்கள் என்றும் கடலூரை சேர்ந்தவர்கள் 122 பேர்கள் என்றும் இவர்களில் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்புள்ளவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை உடனடியாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், வரும் 7ஆம் தேதி முதல் காய்கறி மார்க்கெட் திருமழிசையில் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தைக்கு வந்து சென்றவர்கள் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பதிலாக திருமழிசை சேட்டிலைட் நகரத்தில் கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே வரும் 7ஆம் தேதி முதல் காய்கறிகளை மொத்தமாக வாங்குபவர்கள் திருமழிசை செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.