புதிய அனிமேஷன் முறை....! கோவை ஆசிரியருக்கு மத்திய அரசு விருது...!
- IndiaGlitz, [Wednesday,July 07 2021]
கோவையைச் சேர்ந்த ஆசிரியர் தயானந்த் அவர்களுக்கு, மத்திய அரசு விருதை அறிவித்துள்ளது.
சுந்தராபுரம், காந்திநகர் பகுதியில் வசித்து வரும் தயானந்த், உடுமலைப்பேட்டையில் உள்ள அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சென்ற 2018 -ஆம் ஆண்டு, புதிதாக அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ், புதிய பாடங்களை அனிமேஷன் முறையில் தயார் செய்துள்ளார். அவற்றை மத்திய அரசு அங்கீகரிக்கப்பட்ட, இணையதளத்தில் பதிவேற்றவும் செய்துள்ளார். இந்த பாடங்களை (QR code) மூலம் மாணவர்கள் பார்த்துக்கொள்ளும் வசதியும் புத்தகத்தில் உள்ளது.
இதையடுத்து தயானந்த் துவக்கப் பள்ளிகளுக்கு, ஆங்கில பாடப்புத்தகத்தை வடிவமைக்கும் குழுவிலும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இவர் 170 -க்கும் அதிகமான அனிமேஷன் வீடியோக்களை தயார் செய்து, மாணவர்களுக்கு பயன்படும் வகையில் வெளியிட்டுள்ளதால், மத்திய அரசு இவருக்கு விருதை அறிவித்துள்ளது. 2018-ஆம் ஆண்டின் பள்ளி ஆசிரியர்களுக்காக வழங்கப்படும், ஐசிடி(Information and Communication Technology) விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஆசிரியர் தயானந்த் கூறியிருப்பதாவது,
அனிமேஷன் முறை கல்வியானது, மாணவர்களுக்கு உதவும் வகையில் இருக்கும். இதை பதிவிறக்கம் செய்தும் மாணவர்கள் கற்றுக்கொள்ளலாம். இம்முறையானது மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தக்காணொளிகள் தமிழ்நாடு அரசு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படுவதால், இணையவசதி இல்லாத மாணவர்களும் இதில் பயன்படுகின்றனர். பள்ளியில் பயிலும் மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்த, வெளிநாடுகளில் உள்ள மாணவர்களுடன் இணையம் மூலம் கலந்துரையாட வைக்கின்றோம். இம்முறை மூலமாக அவர்கள் மற்ற மொழிகளையும், எளிதாக கற்றுக்கொள்வார்கள் என தெரிவித்தார்.