நகைகளை அடகு வைத்து கொரோனா நோயாளிகளுக்கு உதவிய கோவை தம்பதி!
- IndiaGlitz, [Wednesday,April 28 2021]
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தம்பதி சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கொரோனா நோயாளிகள் போதிய மின்விசிறி இல்லாமல் தவித்து வருவதைக் கேள்வியுற்ற இத்தம்பதி வீட்டிற்கு வந்த உடனே தங்களது தங்க நகைகளை அடகு வைத்து அதன்மூலம் 2.20 லட்சம் ரூபாயை பெற்று இஎஸ்ஐ மருத்துவமனைக்கு 100 மின்விசிறிகளை வாங்கிக் கொடுத்த சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
இதுதொடர்பாக அந்த மருத்துவமனையின் டீன் ரவீந்திரன் கூறும்போது தங்க நகையை அடகு வைத்துத்தான் மின்விசிறிகளை வாங்கினார்கள் என்பதை கேள்வியுற்றேன். இதனால் சில மின்விசிறிகளை மட்டும் பெற்றுக்கொண்டு மீதியை திருப்பிக் கொடுக்குமாறும் கூறினேன். ஆனால் அந்தத் தம்பதி இதற்கு ஒப்புக் கொள்ளாமல் கொரோனா நோயாளிகளுக்காக இதைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர் எனக் கூறியுள்ளார்.
பெயரைக்கூட சொல்ல விரும்பாத இந்த தம்பதி செய்த காரியம் தற்போது கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள பல கொரோனா நோயாளிகளை நெகிழ வைத்து இருக்கிறது. மும்பை, உ.பி போன்ற பகுதிகளில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை சிலர் இலவசமாக வழங்கி வருகின்றனர். அதுவும் ஒரு இளைஞர் தனது சொகுசு காரை விற்று அதன்மூலம் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜனை வழங்கி வந்தது ஊடகங்களில் கடும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல தற்போது கோவை தம்பதி தங்க நகைகளை விற்று மின்விசிறி வாங்கிக் கொடுத்த சம்பவம் கடும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.