உயிரிழந்த மனைவியுடன் நடனமாடிய கணவர்… சாத்தியமானது எப்படி?

  • IndiaGlitz, [Tuesday,February 02 2021]

தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியில் ஒன்றுதான் விர்ச்ஷுவல் ரியாலிட்டி. இதைப் பயன்படுத்தி பலரும் இறந்தவர்களுடன் பேசுவது, நடனமாடுவது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இறந்தவர்களின் நிழலைக் கண்முன் கொண்டுவந்து அவர்களைப் பற்றிய நினைவுகளுக்கு உயிர்க் கொடுக்கும் விர்ச்ஷுவல் ரியாலிட்டி தற்போது தொலைக் காட்சிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் தென்கொரியாவை சேர்ந்த Meeting You எனும் பிரபல டாக்குமென்ட்ரி ரியாலிட்டி ஷோ ஒன்று உயிரிழந்த மனைவியுடன் அவரது கணவரை நடனம் ஆட வைத்து இருக்கிறது. இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பார்த்த பலரும் அந்த டாக்குமென்ரிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். 51 வயதான கிம் ஜங் சூ என்பவர் 4 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த தனது மனைவியோடு நடனம் ஆட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருக்கிறார். அவரது விருப்பத்தை சமீபத்தில் Meeting You டாக்குமென்ரி நிறுவனம் நிறைவேற்றி இருக்கிறது.

4 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த கிம் ஜங் சூவின் மனைவியை விர்ச்ஷுவல் ரியாலிட்டி உதவியுடன் அவர் நேரில் பார்த்து இருக்கிறார். அவரோடு கைக் கோர்த்து நடனமும் ஆடி இருக்கிறார். 5 குழந்தைகளுக்கு தாயான கிம் ஜங் சூவின் மனைவி கடுமையான நோய் வாய்த் தாக்கத்தால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அவரின் நிழலை பார்த்து கண்ணீர் சிந்திய கிம் ஜங் சூ ஓரளவிற்கு நிம்மதி அடைந்து இருப்பதாகத் தெரிவித்து உள்ளார்.