இன்று நண்பர்கள் தினம்: தமிழ் சினிமாவில் நட்பின் பெருமை குறித்து ஒரு பார்வை

  • IndiaGlitz, [Sunday,August 07 2016]

உலகம் முழுவதும் இன்று 'நண்பர்கள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் என ஒரு மனிதனுக்கு பல்வேறு உறவு முறைகள் இருந்தாலும் இவர்களிடம் சொல்ல முடியாத ஒருசில விஷயங்களை மனம்விட்டு பகிர உதவும் ஒரு புனிதமான உறவுதான் நட்பு. உண்மையான நண்பர்கள் இருக்கும் ஒருவன் வாழ்க்கையில் தோல்வி அடைவதே இல்லை. ஆண்டாண்டு காலமாக ஆண், பெண் இருபாலரும் தொடர்ந்து கடைபிடித்து வரும் நட்பு, நமது தமிழ்சினிமாவில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை தற்போது பார்ப்போம்
கூண்டுக்கிளி: எம்.ஜி.ஆர்-சிவாஜி. இருதுருவங்களாக எம்.ஜி.ஆர், சிவாஜி பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான். நண்பன் சிவாஜிக்காக சிறை செல்லும் கேரக்டரில் எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். எம்.ஜி.ஆர். சிறைக்கு சென்ற பின்னர் அவருடைய மனைவிக்கு பண உதவி செய்யும் சிவாஜி ஒரு கட்டத்தில் அவர் மேல் காதலும் கொள்வார். ஆனால் அதற்கு எம்.ஜி.ஆரின் மனைவி மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் சிறையில் இருந்து வெளியே வரும் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் இடையே நடைபெறும் நட்பு போராட்டம்தான் இந்த படத்தின் கதை.
உயர்ந்த மனிதன்: சிவாஜிகணேசன் - சுந்தர்ராஜன்: ஏவிம் தயாரிப்பில் கடந்த 1968ஆம் ஆண்டு வெளிவந்த படம் உயர்ந்த மனிதன். உண்மையான நட்பின் இலக்கணம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள இந்த படத்தை பார்த்தால் போதும். சிவாஜி கணேசனும் சுந்தர்ராஜனும் முதலாளி, தொழிலாளி என்ற நிலையிலும் தங்களுடைய பழைய நட்பை மறக்காமல், 'அந்த நாள் ஞாபகம், இந்த நாள் வந்ததே, நண்பனே...நண்பனே..நண்பனே.. என்ற பாடலில் நட்பின் உணர்ச்சிபூர்வ நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இன்றளவும் நட்பின் பெருமையை போற்றும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.
தளபதி: ரஜினி-மம்முட்டி: ஒரு பெண்ணுக்கு கற்பு எவ்வளவு முக்கியமானதோ, அந்த அளவு நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படைக்கப்பட்ட பாத்திரப்படைப்புதான் சூர்யா-தேவா கேரக்டர்கள். நட்பைக்கூட கற்பை போல எண்ணுவேன்' என்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் வரிகள் இந்த கேரக்டரின் நட்பை எளிதாக விவரித்துள்ளது. உயிர் நண்பனுக்காக காதல் முதல் தாய்ப்பாசம் வரை அனைத்தையும் இழக்க துணியும் ஒரு கேரக்டரில் ரஜினியும் அவரது நண்பராக மம்முட்டியும் நடித்துள்ளனர் என்பதைவிட வாழ்ந்துள்ளனர் என்று கூறுவதுதான் பொருத்தமானது.
நினைத்தாலே இனிக்கும்: கமல்-ரஜினி: ஒரு இசைக்குழுவில் இடம்பெற்றிருக்கும் நண்பர்களான கமல், ரஜினி இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக சிங்கப்பூர் செல்வதும் அங்கு நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளும்தான் இந்த படத்தின் கதை. இடையிடையே ஒருசில காதல் காட்சிகளும் சில சோக காட்சிகளும் இருந்தாலும் முழுக்க முழுக்க ஜாலியான நண்பர்களாக கமல்-ரஜினியை இந்த படத்தில் பார்க்கலாம்.

புதுவசந்தம்: கதாநாயகி சித்தாரா, நான்கு ஆண் நண்பர்களுடன் கொண்டிருக்கும் உண்மையான நட்பின் ஆழத்தை இதைவிட வேறு எந்த படத்திலும் காண்பித்ததாக ஞாபகம் இல்லை. ஆண், பெண் நட்பு காதலில்தான் முடியும் என்று பெரும்பாலானோர் கூறி வந்தாலும் காதலையும் தாண்டி ஆண், பெண்ணால் இறுதிவரை நட்புடன் இருக்க முடியும் என்று மெய்ப்பித்தது இந்த படம்.
கண்ணெதிரே தோன்றினாள்: பிரசாந்த்-கரண்: இந்த படத்தில் பிரசாந்த்-கரண் ஆகிய இருவரும் உண்மையான நண்பர்களுக்கு இலக்கணமாக நடித்திருப்பார்கள். நண்பனின் தங்கை என்று தெரியாமல் சிம்ரனை காதலிக்கும் பிரசாந்த், பின்பு ஒருநாளில் கரணின் தங்கைதான் சிம்ரன் என்று தெரிந்ததும் காதலை கைவிட முடிவு செய்வதும், ஏற்கனவே ஒரு நண்பனால் தனது சகோதரியை இழந்திருந்த கரண், பிரசாந்த்-சிம்ரன் காதலை புரிந்து கொண்டு நண்பனுக்கு தனது தங்கையை திருமணம் செய்து கொடுக்க சம்மதம் தெரிவிப்பதுமான கிளைமாக்ஸ் காட்சியில் ஆனந்தக்கண்ணீரில் மூழ்காத ரசிகர்கள் இருக்க முடியாது என்றே கூறலாம்.
நட்புக்காக: சரத்குமார்-விஜயகுமார்: நட்புக்கு வயது தடையில்லை என்பதும் எத்தனை வயது ஆனாலும் உண்மையான நட்புக்கு அழிவில்லை என்பதையும் கே.எஸ்.ரவிகுமார் இந்த படத்தில் மிக அழகாக உருவாக்கியிருப்பார். சரத்குமாரும், விஜயகுமாரும் தங்கள் நட்பின் உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்திய படம்தான் நட்புக்காக..
ராஜாவின் பார்வையிலே: விஜய்-அஜித்: எம்.ஜி.ஆர்-சிவாஜி இணைந்த நடித்த ஒரே படம் 'கூண்டுக்கிளி' என்பது போல் விஜய்-அஜித் இணைந்து நடித்த ஒரே படம் 'ராஜாவின் பார்வையிலே. விஜய்யின் உயிர் நண்பரான அஜித், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள, அந்த பாதிப்பில் இருந்து மீளாத விஜய், தன்னை உயிருக்குயிராக காதலிக்கும் பெண்ணின் நட்பை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார். அஜித்தும், விஜய்யும் இந்த படத்தில் உண்மையான நண்பர்களாக வரும் காட்சிகள் குறைவு என்றாலும் நிறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நண்பன்: விஜய்-ஜீவா-ஸ்ரீகாந்த்: கல்லூரி கால நட்பு என்பது காலம் முழுவதும் மறக்க முடியாத ஒரு வசந்தகாலம். இந்த காலகட்டத்தில் ஏற்படும் நட்பு நம்முடைய வாழ்க்கை பாதையையே மாற்றிவிடும் என்பதை உணர்த்தும் பாடம் தான் 'நண்பன்' படம். குடும்பத்தின் வறுமை சூழ்நிலை காரணமாக பாடத்தில் அக்கறை செலுத்தாத ஜீவா மற்றும் போட்டோகிராபில் முழு ஈடுபாடு இருக்கும் நிலையில் பெற்றோர்களுக்காக வேண்டாவெறுப்பாக பொறியியல் படிக்கும் ஸ்ரீகாந்த் ஆகியோர்களின் வாழ்க்கைப்பாதையை மாற்றியது அவர்களுடைய நண்பன் விஜய் கேரக்டர்தான். ஷங்கரின் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்களது அதிகபட்ச நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியிருந்தார்கள்
சென்னை 600028: சிவா-நிதின்சத்யா: ஒரு அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்களின் நட்பையும் அவர்களது வெற்றி தோல்வியையும் நகைச்சுவையுடன் வெளிப்படுத்திய படம் தான் 'சென்னை 600028. நண்பன் நிதின்சத்யாவின் தங்கை விஜயலட்சுமியை சிவா காதலிப்பதும் அதனால் நட்பில் விரிசல் ஏற்படுவதும், அந்த விரிசல் கிரிக்கெட் போட்டியை எவ்வாறு பாதிக்கின்றது என்பதையும் இறுதியில் நட்பு வென்றதையும் இயக்குனர் வெங்கட்பிரபு மிக அழகாக இந்த படத்தில் காண்பித்திருப்பார்.