ஒரு திரைப்படத்தின் விமர்சனம் எப்படி இருக்க வேண்டும்? நித்யாமேனன் கருத்து

  • IndiaGlitz, [Wednesday,February 28 2018]

ஓகே கண்மணி, மெர்சல் ஆகிய படங்கள் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நாயகிகளில் ஒருவராகிய நித்யாமேனன், நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தனது உடல் எடை குறித்து மனம் திறந்து கூறியுள்ளார். எனது உடல் எடை குறித்து நான் பெரிதாக கவலைப்படுவதில்லை. தேவைப்பட்டால் குறைக்கவும், இல்லையென்றால் அதிகரிக்கவும் முடியும் என்பதால் உடல் எடையை பொருத்தவரை அதன்போக்கில் விட்டுவிடுவேன்' என்று கூறியுள்ளார். பொதுவாக முன்னணி நடிகைகள் உடல் எடையில் அதிக சிரத்தை எடுத்து வரும் நிலையில் இதுகுறித்து அதிக கவலைப்படாத நாயகியாக நித்யாமேனன் உள்ளது ஆச்சரியத்தை அளிக்கின்றது

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'மகாநதி' படத்தில் முதலில் நித்யாமேனன் நடிப்பதாகத்தான் இருந்தது. பின்னர் அது கீர்த்திசுரேஷூக்கு கைமாறியது. இதுகுறித்து நித்யாமேனன் கூறியபோது, 'சாவித்ரி அவர்கள் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்திருந்ததால் அவர் கேரக்டரில் நடிக்க விரும்பினேன். ஆனால் ஒருசில காரணங்களால் அது முடியாமல் போனது. இதற்கும் ஒரு காரணம் இருக்கும்' என்று கூறினார்

சினிமா விமர்சனம் குறித்து ஒரு ஜர்னலிசம் மாணவி என்ற வகையில் நித்யாமேனன் கூறியபோது, 'விமர்சனம் எப்போது சரியாக இருக்க வேண்டும். தனிப்பட்ட தாக்குதல் இல்லாமல் ஒரு படத்தின் நிறைகுறைகளை சரியாக விமர்சனம் செய்தால் நான் அந்த விமர்சனத்தை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வேன்' என்று கூறினார்

மெர்சல் மற்றும் பத்மாவதி படங்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு குறித்து நித்யாமேனன் கூறியபோது, 'ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயத்தில் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கும். அனைவருக்கும் ஒரே கருத்து இருக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது. இதுபோன்ற நேரங்களில் நாம்  எதிர்ப்பை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை' என்று கூறினார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ் கருத்துக்கள் பதிவு செய்வதை தடுக்க முடியாது என்றும், அனைவருக்கும்  சமூக வலைத்தளம் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாகிவிட்டதென்றும் கூறிய நித்யா, தான் அதிகம் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதில்லை என்றும் கூறினார். மேலும் பைக் ஓட்டுவதில் தனக்கு அதிக விருப்பம் இருந்தாலும் நேரம் கிடைக்கவில்லை என்றும், எதிர்காலத்தில் பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டவுள்ளதாகவும் தெரிவித்தார்