தமிழ் சினிமாவில் பெண்கள்! மார்ச் 8- மகளிர் தின சிறப்பு கட்டுரை
- IndiaGlitz, [Wednesday,March 08 2017]
பொதுவாக திரைத்துறை என்றால் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையாகவே கருதப்படுகிறது. இந்த துறையில் ஒரு காலத்தில் பெண்கள் நடிகையாக மட்டுமே இருந்துள்ளனர். மிகவும் அபூர்வமாக ஒருசிலரே நடிப்பு தவிர மற்ற துறைகளை தேர்வு செய்து வந்தார்கள். ஆனால் தற்போது நடிப்பு மட்டுமின்றி இயக்கம், ஒளிப்பதிவு, மேக்கப், நடன இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், என பல துறைகளில் பெண்கள் ஆர்வம் காட்டி தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். திரையுலகில் பெண்கள் எந்த அளவுக்கு அனைத்து துறையிலும் ஈடுபடுகின்றார்களோ, அந்த அளவுக்கு திரைத்துறை ஆரோக்கியமாக வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது எந்தெந்த துறையில் பெண்கள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர் என்பதை இன்றைய மகளிர் தின நாளின் ஸ்பெஷலாக பார்ப்போம்.
இயக்குனர்: பானுமதி உள்பட ஒருசில பெண்கள் இயக்குனர் துறையில் 50 ஆண்டுகளுக்கு முன்பே காலடி எடுத்து வைத்த போதிலும் இயக்குனர் துறையில் பெண்களும் வெற்றி பெற முடியும் என்பதை துவக்கி வைத்தவர் நடிகை ஸ்ரீப்ரியா, கடந்த 1984ஆம் ஆண்டு 'சாந்தி முகூர்த்தம்' என்ற படத்தை இயக்கிய ஸ்ரீப்ரியா அதன் பின்னர் 'நீயா' படத்தின் இரண்டாம் பாகமான 'நானே வருவேன்' , மாலினி 22 பாளையம்கோட்டை ஆகிய படங்களை இயக்கினார். மேலும் 'த்ரிஷ்யம்' படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தையும் இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீப்ரியாவை தொடர்ந்து பெண் இயக்குனர்களாக தற்போது ரஜினியின் இரண்டு மகள்களான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் கிருத்திகா உதயநிதி, லட்சுமி ராமகிருஷ்ணன், உள்பட பல பெண்கள் இயக்குனர் துறையில் சாதித்து வருகின்றனர். உதவி இயக்குனராக பண்புரிந்து வரும் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் மிக விரைவில் இயக்குனர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒளிப்பதிவு: பிரபல ஒளிப்பதிவாளர் அசோக் குமார் அவர்களிடம் உதவி ஒளிப்பதிவு இயக்குனராக இருந்து 'கே.பாக்யராஜ் இயக்கிய 'சின்னவீடு' படத்தின் மூலம் ஒளிப்பதிவு இயக்குனர் ஆனவர் பி.ஆர்.விஜயலட்சுமி. இவர்தான் ஆசியாவின் முதல் பெண் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னவீடு' படத்தை தொடர்ந்து 'அறுவடை நாள்', 'சிறைப்பறவை', உள்பட 20 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜயலட்சுமியை அடுத்து பெண் ஒளிப்பதிவாளர்களில் குறிப்பிடத்தக்கவர் பௌசியா. இவர் நடிகை ரேவதி இயக்கிய ''மித்ர மைஃப்ரண்ட்'' மற்றும் பார்த்திபன் இயக்கிய 'இவன்' உள்பட ஒருசில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இசையமைப்பாளர்: பெண் இசையமைப்பாளர் என்றால் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது பானுமதி அவர்கள் தான். நடிகை, இயக்குனர், பாடகி, தயாரிப்பாலர் ஆகிய அவதாரத்துடன் இசையமைப்பாளர் அவதாரத்தையும் எடுத்தவர் பானுமதி. இவர் இசையமைத்த 'சக்ரபாணி', 'இப்படியும் ஒரு பெண்' ஆகிய படங்களின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரஹைனா உள்பட ஒருசில பெண் இசையமைப்பாளர்கள் கோலிவுட்டில் இசையமைத்து வருகின்றனர்.
நடன இயக்குனர்: நடனம் என்றாலே பெண்களுக்கு உரிய ஒரு கலை என்று இருக்கும்போது அதில் பெண் நடன இயக்குனர் இல்லாமல் இருப்பார்களா? டான்ஸ் மாஸ்டர் கலா, பிருந்தா, காயத்ரி ரகுராம், சுசித்ரா சந்திரபோஸ், உள்பட பல பெண்கள் நடன இயக்குனர் துறையில் ஜொலித்து வருகின்றனர்.
பாடலாசிரியர்: பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே தமிழ் சினிமாவுக்கு பாடல்கள் எழுதி வரும் நிலையில் இந்த துறையிலும் சாதனை புரிந்துள்ளார் ஒரு பெண். அவர்தான் தாமரை. 'இனியவளே' படத்தில் தொடங்கி தற்போது சுமார் 50 படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். பிரபல இயக்குனர் கவுதம் மேனனின் பெரும்பாலான படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைத்துறையின் அனைத்து பிரிவுகளில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருவது ஆரோக்கியமான விஷயம். பெண்களுக்கு சிறு வயதிலேயே ஊக்கம் கொடுத்து அவரவர்களுக்கு பிடித்த கலையில் பயிற்சி அளித்து அதிக பெண் சாதனையாளர்களை உருவாக்க்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இந்த மகளிர் தினத்தில் சாதனை புரிந்த அனைத்து பெண்களுக்கும் நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.