ரூ.500 கோடிக்கு புள்ளி வைத்த 'பொன்னியின் செல்வன்'.. கோலம் போடும் மாஸ் நடிகர்களின் படங்கள்..!
- IndiaGlitz, [Saturday,August 26 2023]
தெலுங்கு திரை உலகில் ’பாகுபலி’, ‘பாகுபலி 2’ மற்றும் ’ஆர்.ஆர்.ஆர்’, கன்னடத் திரையுலகில் ’காந்தாரா’ பாலிவுட்டில் ’பதான்’ ஆகிய திரைப்படங்கள் 500 கோடி ரூபாய் முதல் 1000 கோடி ரூபாய் வரை வசூல் செய்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் படங்கள் அந்த சாதனையை எட்டாமல் இருந்தது தமிழ் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் தான் முதல் 500 கோடி ரூபாய் படம் என்று மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் புள்ளி வைத்தது. இதனை அடுத்து மாஸ் நடிகர்களின் படங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’ஜெயிலர்’ திரைப்படம் அசால்ட்டாக 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதை அடுத்து இன்னும் சில 500 கோடி மற்றும் 1000 கோடி படங்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் 500 முதல் 1000 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என்று சமூகவலைத்தள டிராக்கர்கள் கணித்துள்ளனர். அதேபோல் சிவகார்த்திகேயனின் ’அயலான்’ தனுஷின் ’கேப்டன் மில்லர்’ விக்ரமின் ’தங்கலான்’, சூர்யாவின் ’கங்குவா’ ஆகிய திரைப்படங்கள் 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் அல்லது தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம் ரூ.1000 கோடியை நெருங்கும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ரூ.500 கோடி வசூல் என்ற சாதனைக்கு ’பொன்னியின் செல்வன்’ புள்ளி வைத்த நிலையில் மற்ற மாஸ் நடிகர்களின் படங்கள் கோலம் போட்டு வருவது தமிழ் திரையுலகில் மிகப்பெரிய பாசிட்டிவ் ஆக பார்க்கப்படுகிறது.