'கொலைகாரன்' திரைவிமர்சனம் - சஸ்பென்ஸ் த்ரில்லர்
விஜய் ஆண்டனி, அர்ஜூன் முதல்முறையாக இணைந்துள்ள 'கொலைகாரன்' திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று இந்த படம் வெளியாகியுள்ளது. த்ரில் ரசிகர்களை இந்த படம் திருப்திபடுத்தியதா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.
ஒரு அபார்ட்மெண்டில் தனியாக வாழ்ந்து வருபவர் விஜய் ஆண்டனி. அவருடைய வீட்டின் எதிர்வீட்டில் இருப்பவர் நாயகி ஆஷ்மா மற்றும் அவரது தாயார் சீதா. இந்த நிலையில் ஒரு கொலை வழக்கை துப்பறியும் காவல்துறை அதிகாரி அர்ஜூன், கொலை செய்யப்பட்ட நபருக்கும் ஆஷ்மாவுக்கும் சம்பந்தம் இருப்பதை கண்டுபிடிக்கின்றார். ஆனால் கொலை செய்யப்பட்டவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதால் அவரை இவ்வளவு கொடூரமாக ஒரு பெண்ணால் கொலை செய்ய முடியாது என்பதால் அவரது சந்தேகம் எதிர்வீட்டில் இருக்கும் விஜய் ஆண்டனி மேல் பாய்கிறது. 'கொலைகாரன்' ஆஷ்மாவும் அவரது தாயாருமா? அல்லது விஜய் ஆண்டனியா? அல்லது மூவருமே சேர்ந்து கொலை செய்தார்களா? என்று விசாரணை செய்யும் அர்ஜூனுக்கு சில திடுக்கிடும் தடயங்கள் கிடைக்கின்றன? அந்த தடயங்கள் என்ன? உண்மையில் கொலை செய்யப்பட்டவர் யார்? கொலை செய்தது யார்? என்பதை கடைசி பத்து நிமிடத்தில் இயக்குனர் அவிழ்க்கும் முடிச்சுதான் இந்த படத்தின் கதை.
விஜய் ஆண்டனி எப்போதும்போல் அமைதியாக நடித்துள்ளார். வழக்கம்போல் ரொமான்ஸ் காட்சிகளில் கூட முகத்தை உம்மென்று வைத்துள்ளார். சீரியஸான காட்சிகளில் அவரது நடிப்பு ஓகே. குறிப்பாக அர்ஜூன் அவரிடம் விசாரிக்க வரும்போது அவர் பதில் கூறும் காட்சி சிறப்பு. ஸ்டண்ட் காட்சியில் வழக்கம்போல் சுறுசுறுப்பு காட்டியுள்ளார்.
நாயகி ஆஷ்மாவின் கேரக்டரை சுற்றித்தான் இந்த கதையே நகர்கிறது என்பதால் அவரது நடிப்பும் கவனிக்கப்படுகிறது. ஒரு புதுமுகம் போல் இல்லாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கிளைமாக்ஸில் இவரது கேரக்டரிலும் ஒரு சஸ்பென்ஸை வைத்துள்ளது இயக்குனரின் புத்திசாலித்தனம்.
ஆக்சன் கிங் அர்ஜூனுக்கு இந்த படத்தில் ஆக்சன் இல்லாவிட்டாலும் அவரது அனுபவ நடிப்பு பல இடங்களில் பளிச்சிடுகிறது. குறிப்பாக ஒரு கொலை நியாயமான காரணத்திற்காக செய்யப்பட்டிருந்தாலும் அந்த கொலைகாரனை தன்னால் மன்னிக்க முடியாது, நான் சட்டத்தை எழுத விரும்பவில்லை, ஏற்கனவே எழுதப்பட்ட சட்டத்தை மதிக்கவே விரும்புகிறேன்' என்று விஜய் ஆண்டனியிடம் அழுத்தமாக கூறும் காட்சியில் ஆக்சன் கிங் நடிப்பு அபாரம். தன்னுடைய டிபார்ட்மெண்டில் இருக்கும் சீனியர்கள் உள்பட பலரும் இந்த கொலையை ஒரு கோணத்தில் பார்க்கும்போது அவர் மட்டும் வித்தியாசமாக சிந்தித்து இருப்பதும் அவரது கேரக்டருக்கு மரியாதையை தருகிறது.
நாசர், சீதா ஆகியோர் ஓரிரு காட்சிகளில் வந்தாலும் நிறைவான நடிப்பை தந்துள்ளனர் .
இசையமைப்பாளர் சைமன் கிங் இசையில் படத்தில் வரும் முதல் இரண்டு பாடல்கள் ஓகே என்றாலும் இந்த படத்திற்கு பாடல்கள் தேவையில்லை என்பதால் யோசிக்காமல் இரண்டையும் அப்படியே தூக்கிவிடலாம்.பாடல்கள் படத்தின் விறுவிறுப்பை குறைக்கின்றது. பின்னணி இசை டைட்டிலில் இருந்து இறுதி வரை அபாரம். குறிப்பாக தீம் மியூசிக் தியேட்டரை விட்டு வெளியே வந்தபின்னரும் காதில் ஒலித்து கொண்டே உள்ளது.
ஒளிப்பதிவாளர் முகேஷின் ஒளிப்பதிவும், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பும் படத்திற்கு வலு சேர்க்கின்றது.
இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் ஒரு த்ரில் சஸ்பென்ஸ் கொலைக்கதையை சரியான திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக நகர்த்தி கொண்டு செல்கிறார். தமிழில் ஏகப்பட்ட கொலைக்கார கதை வந்திருந்தாலும் முடிந்தளவு இந்த படத்தை மற்ற படத்தில் இருந்து வித்தியாசப்படுத்தியுள்ளார். விஜய் ஆண்டனியின் கேரக்டரில் உள்ள சஸ்பென்ஸை இடைவேளையிலும், ஆஷ்மாவின் கேரக்டரில் உள்ள சஸ்பென்ஸை கிளைமாஸிலும் வெளியிடும்போது பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கின்றது. ஆரம்பம் முதல் அடுத்தடுத்து போட்டு வந்த முடிச்சுகளை கடைசி பத்து நிமிடத்தில் வெகு எளிதாக அவிழ்த்துவிடும்போது கொஞ்சம் ஆச்சரியமும் கொஞ்சம் நம்பகத்தன்மையின்மையும் ஏற்படுகிறது. மேலும் அர்ஜூன் கேரக்டரை ஆரம்பம் முதல் ஒரு கோணத்தில் காண்பித்துவிட்டு கடைசியில் அவர் எடுக்கும் முடிவு, அவருடைய கேரக்டரின் மதிப்பை குறைக்கின்றது. இருப்பினும் த்ரிஷ்யம்-பாபநாசம் லெவலில் ஒரு தரமான த்ரில் படம் என்பதால் ஒருமுறை இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்
Comments