புதிய பாதை அமைத்த பிறகு நடிகர் பார்த்திபனின் ஆதிக்கத்தால் கலைஞர் பார்த்திபன் ரொம்ப நாள் கோமாவில் இருந்து சில வருடங்களுக்கு முன் கதை திரைக்கதை வசனம் படம் மூலம் விஸ்வரூபம் எடுத்தார். அந்த படத்துக்கு பிறகு அவர் குருநாதர் பாக்யராஜின் மகன் சந்தனுவை வைத்து எடுத்திருக்கும் கோடிட்ட இடங்களை நிரப்புக ஓரளவுக்கு கவர்கிறது என்பதே நிஜம்.
சாந்தனு ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் சென்னைக்கு ஒரு வியாபார விஷயமாக வரும் அவரை டாக்ஸி டிரைவர் பார்த்திபன் தன கட்டுப்பாட்டில் இருக்கும் பங்களாவில் தங்க வைக்கிறார். பார்த்திபனின் இளம் மனைவி பார்வதி நாயர் சமையல் செய்து தருகிறார். குடிகார பார்த்திபனால் திருப்தி படுத்த முடியாத பார்வதி மீது ஈர்ப்பு கொள்ளும் சாந்தனு அவரை மணம் முடிக்கக்கூட தயார் நிலையில் இருக்க அடுத்து என்னாகிறது என்பதை ஆற அமர சொல்லி கடைசியில் சற்றும் எதிர்பாராத கிளைமாக்ஸில் முடிகிறது.
தன் குருநாதருக்கு உண்மையிலேயே பெரிய கைம்மாறு செய்ய்திருக்கிறார் பார்த்திபன். இதுவரை செயற்கையான நடிப்பை பிடிவாகமாக பிடித்து கொண்டிருந்த சந்தனுவை இயல்பாக நடிக்க வைத்து பெருமளவுக்கு வெற்றியடைந்திருக்கிறார். பார்வதியை கண்டு ஈர்ப்படைவதிலாகட்டும், குற்ற உணர்ச்சியில் தவிப்பதாகட்டும், பிரபு தேவாவின் நடன அமைப்பில் டி ஆரின் குரலில் குத்துப்பாட்டில் அசத்துவதிலாகட்டும் மாரு ஜென்மம் எடுத்திருக்கிறார் சந்தனு வாழ்த்துக்கள். பார்வதி நாயர் மப்பும் மந்தாரமுமான கதாபாத்திரத்தில் தமிழ் சினிமா கதாநாயகிகளின் அரத பழசான பல இலக்கணங்களை உடைத்தெறிகிறார். நடிப்பும் கவர்ச்சியும் சரிபாதியாக தந்து கவர்கிறார். காலை இழுத்து இழுத்து நடக்கும் பார்த்திபன் வாய் திறந்தாலே இரட்டை அர்த்த வசனங்கள் ஆனால் இந்த கதைக்கு அது மிகவும் பொருந்துவதால் தியேட்டரில் கைத்தட்டல் எகிறுகிறது. நிமிடத்தில் சொல்ல வந்ததை மறந்து போகும் பாத்திரத்தில் தம்பி ராமையா ஜொலிக்கிறார். அதுவும் அவர் மறதியால் அவர் குடும்ப வாழ்க்கை ஆன புஞ்சரை பார்த்திபன் கிளறும்போது சிரிப்பு கரகோஷம். சாந்தனுவின் ஆஸ்திரேலியா தோழியாய் சிம்ரன் இரண்டு காட்சிகளில் செல்போனில் தோன்றி காதல் (காமம்) அட்வைஸ் செய்துவிட்டு செல்கிறார்.
சி. சத்யாவின் இசையில் பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி அழகாக பொருந்திப்போகின்றன. ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் கலை இயக்கம் காட்சிகளை மெருகூட்டுகின்றன. வித்தியாசமான திரைக்கதையை கையில் எடுத்திருக்கும் பார்த்திபன் ஒரு திரில்லர் போல கொண்டு சென்றிருக்கிறார். பல காட்சிகளில் நமக்கு எழும் கேள்விகளும், அபத்தங்களும் இறுதியில் பார்த்திபன் கோடுகளை நிரப்பியபின் சபாஷ் போட வைக்கின்றன. மனோதத்துவ ரீதியில் ஒருவன் எப்படி அடித்தால் எங்கு விழுவான் என்பதை புத்திசாலித்தனமாக கதையில் பதிவிடுகிறார் புதிய பாதை நாயகன். ஒரு லொகேஷன், மிக சில நடிகர்களை வைத்து கொண்டு ஒரு கதையை சொல்லலாம் என்பதை இளம் இயக்குனர்கள் பார்த்திபனிடத்திலிருந்து தாராளமாக கத்து கொள்ளலாம். தியேட்டரை விட்டு வெளிய வந்த பிறகும் ஒவ்வொரு ரசிகனும் கோடிட்ட இடங்களை நிரப்ப முற்படுவான் என்பதே நவீன காலத்து இயக்குனர்களுக்கு சற்றும் சளைக்காமல் தன்னை புதுப்பித்து வைத்திருக்கிறார் என்பதற்கு சான்று.
குறைகள் என்று பார்த்தால் எந்த பாத்திர படைப்பிலும் ஒரு அழுத்தம் இல்லாததால் ஷாந்தனுவுக்கும் பார்வதிக்கும் ஒரு ஈர்ப்பு வந்த பிறகு கிளைமாக்ஸில் வரும் அசத்தலான திருப்பம் வரைக்கும் ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதை பொறுமையை சோதிக்கின்றன. ஆரம்பத்தில் வரும் பேய் காட்சிகள் அபத்தம். கதை திரைக்கதை இயக்கம் படத்தில் இருந்த எதார்த்தம் இதில் வெகுவாக மிஸ்ஸிங். ஒரு வேளை திரைக்கதையின் தன்மையை கொண்டு வேண்டுமென்றே அப்படி எழுதப்பட்டதா என்பது பட குழுவுக்கே வெளிச்சம்.
மெதுவாக நகர்ந்தாலும் காமடி கலந்த வித்தியாசமான திரைக்கதையும் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத கிளைமாக்ஸும் நிச்சயம் கவரும்.
Comments