கொடி வீரன்- வன்முறைக்கு நடுவே பாச போராட்டம்
சசிகுமாரின் உறவினர் மற்றும் கொடி வீரன் படத்தின் இணை தயாரிப்பாளர் அசோக் குமாரின் அகால மரண சர்ச்சை மற்றும் பல வித போராட்டங்களுக்கு பிறகு இன்று வெளி வந்திருக்கிறது கொடி வீரன் படம். இது ஒரு அக்மார்க் முத்தையாவின் வன்முறை கதை அவருடைய முந்தைய பட பாணியிலேயே உருவாகியிருப்பது ரசிகர்களை எப்படி கவர்கிறது என்பது இனிமேல்தான் தெரியும்.
கணவன் செய்த துரோகத்தினால் நிறைமாத கர்ப்பிணி தூக்கில் தூங்குகிறாள் அப்போது பிறக்கும் பெண் குழந்தையை பாசத்தி ஊட்டி வளர்கிறான் அண்னன் கொடிவீரனான சசிகுமார். தங்கை சனுஷா தைரியமான கல்லூரி பெண்ண அவளும் அண்ணனும் ஒரு அரசு அதிகாரி விதார்த்தை கொடியவர்கள் கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றுகிறார்கள். மஹிமா நம்பியாரை சசிகுமார் கோவிலில் பார்த்து காதல் வயப்படுகிறார். அவரும் ஒரு முரட்டு தனமான அண்னன் மீது பாசமுள்ள ஒரு தங்கை. இன்னொரு புறம் கொடூர மனம் கொண்ட பசுபதி அவர் தங்கை பூர்ணாவின் கணவர் செய்யும் தீய காரியங்களை எதிர்க்கும் எவராக இருந்தாலும் வெட்டிவிட்டு ஜெயிலுக்கு போகவும் தயங்க மாட்டார். சசிகுமார் சாமியாடி குறியும் சொல்ல கூடியவர் ஒரு கட்டத்தில் தன் தங்கையின் திருமணம் மிகுந்த வன்முறைக்கு நடுவில் நடக்கும் என்றும் அதில் அவள் நிறைய இழக்க நேரிடும் என்றும் குறி சொல்கிறார். யாரால் ஆபத்து வந்தது இந்த மூன்று அண்னன் தங்கை ஜோடிகள் எவ்வாறு ஒருத்தருடைய வாழ்க்கையில் மற்றவர் பாதிக்கிறார் என்பதே மீதி திரைக்கதை.
கொடிவீரன் கதாபாத்திரம் சசிகுமாருக்கோ நமக்கோ ஒன்றும் புதிதில்லை அவர் ஏற்கனவே செய்த குட்டி புலி கிடாரி வெற்றிவேல் ஆகியவற்றின் கலவை தான். வழக்கம் போல செண்டிமெண்ட் மற்றும் சண்டையில் சமாளிக்கும் சசி காதலில் வழியும் காட்சிகளில் தான் பாடாய் படுத்துகிறார் . சசி சார் கொஞ்சம் இதை விட்டு நீங்கள் அடுத்த தளத்திற்கு போகவேண்டிய நேரம் வந்துவிட்டது. மூன்று கேரளா நாயகிகளில் சசியின் தங்கையாக வரும் சனுஷாவுக்கு தான் சொல்லிக்கொள்வது போல் கதாபாத்திரம் அதை கச்சிதமாக செய்திருக்கிறார். மஹிமா நம்பியார் பார்க்க நல்ல அழகு பாடல்களிலும் மிளிர்வு ஆனால் அதை தாண்டி நடிப்பை வெளிப்படுத்த காட்சிகள் இல்லை. பூர்ணா இந்த படத்திற்காக மிகவும் சிரத்தை எடுத்திருக்கிறார் தன் தலை முடியை கூட தாரை வார்த்திருக்கிறார். ஆனால் அந்த எதிர்மறை கதாபாத்திரத்துக்கு இயக்குனர் சரியாக உயிர் கொடுக்காததனால் அது வீணாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். படத்தில்கணவர் மீது பாசம் கொண்டவராக ஒரு சின்ன ஷாட் கூட இல்லாததால் அவர் இறந்த பிறகு அவர் காட்டும் ஆவேசத்திற்கு எந்த நியாயமும் இல்லை. கொடூர குணம் கொண்ட வில்லன் வேடம் பசுபதிக்கு கை வந்த கலை அரசு அதிகாரியாக வரும் விதார்த் உப்பு சப்பில்லாத கதாபாத்திரத்தால் வீணடிக்கப்பட்டிருக்கிறார். பாலா சரவணனும் மாயக்கண்ணணாக வரும் நடிகரும் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.
முத்தையா ஜாதியை முன்னிலை படுத்தி மட்டுமே படம் எடுப்பார் என்பதை கொடி வீரன் சற்று மாற்றி மூன்று வித அண்ணன் தங்கைகளின் கதைகளை சொல்ல முற்பட்டிருக்கிறார் என்பதே பெரிய ஆறுதல். அவன் கொடிவீரன் இல்லடா எங்க குல வீரன் என்பது போன்ற பஞ்ச் டயலாக் மற்றும் கதாநாயக துதி பாடும் காட்சிகள் முடிந்து முதல் பாதி விறு விறுப்பாகவும் ஆவலை தூண்டும் விதமாக செல்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இடைவேளை நோக்கி பயணிக்கும் அந்த ஒரு இருப்பது நிமிடம் பரபர. சசிகுமார் தன் எதிரிகள் அனைவரையும் ஒரே இடத்தில கூட்டி அவர்களை எச்சரிக்கும் விதம் அருமை. படத்திற்கு மிக பெரிய பலவீனம் யோசிக்காமல் தன் தங்கைக்காக கொலை செய்யும் பசுபதி எதற்காக சசிகுமாரிடம் ஆடு புலி ஆட்டம் ஆடுகிறார் என்பதே. இடைவேளையில் பெரிதாக ஆவலை கூடி பின் இரண்டாம் பாதியில் வேகமும் குறைந்து அந்த ஆவலும் பூர்த்தியாகாமல் போவது துரதிஷ்டம். முத்தையா அந்த மூன்று அன்னன் தங்கைகளின் உணர்ச்சி போராட்டத்தை காட்டாமல் வன்முறையையே பெரிதும் நம்பியது ஒரு வித்யாசமான கதையை சிதைத்து விடுகிறது. ரகுநந்தனின் கிராமிய மணம் கலந்த பாடல்கள் தாளம் போடா வைக்கின்றன பின்னணி இசையும் ஓகே எஸ் ஆர் கதிர் காமிரா அழகான கிராமத்தையும் கடைசி சண்டையில் பறக்கும் புழுதி தண்ணீரையும் அசத்தலாக காட்டுகிறது. சூப்பர் சுப்பாராயன் சண்டை அமைப்பு சபாஷ். முத்தையா ஒரு நல்ல கதை கருவை வன்முறை குறைத்து இன்னும் அழுத்தமாக உணர்வு பூர்வமாக சொல்லியிருந்தால் இந்த கொடி வீரனை இன்னும் ரசித்திருக்கலாம்.
சசிகுமார் மற்றும் முத்தையா ரசிகர்களை நிச்சயம் கவர்வான் இந்த கொடி வீரன்
Comments