கொடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் திடீர் தற்கொலை?
- IndiaGlitz, [Tuesday,July 04 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்த தினேஷ்குமார் என்பவர் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். தினேஷ்குமார் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் இருந்ததாகவும் இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் கொடநாடு எஸ்டேட்டில் பல மர்ம சம்பவங்கள் நடந்து வருகின்றது தெரிந்ததே. அங்கு பணி புரிந்த ஓம்பகதூர் என்ற காவலாளி கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கார் டிரைவர் கனகராஜ் திடீரென சாலை விபத்தில் உயிரிழந்தார். மேலும் அவரது கூட்டாளியான சயன் என்பவரும் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதுகுறித்து காவல்துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில் கொட நாடு எஸ்டேட் கணக்குவழக்கு முழுவதையும் கம்ப்யூட்டரில் பார்த்துவந்த தினேஷ்குமாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கண்ணில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பிய தினேஷ்குமார் கடந்த சில நாட்களாக மன அழுதத்தில் இருந்ததாகவும் இந்த நிலையில் திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என்றால் அவருக்கு கொடநாடு எஸ்டேட் குறித்த முழு விபரங்களும்ம் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. முதலில் கண் பார்வை கோளாறும், பின்னர் திடீரென தற்கொலையும் நிகழ்ந்துள்ளதால் அவரது மரணத்தில் மர்மம் இருக்கின்றதா? என்பது போலீஸ் விசாரணையின் முடிவில் தான் தெரியவரும்.