புறம்போக்கு நாயகியின் புதிய ஆபரேஷன் ஆரம்பம்

  • IndiaGlitz, [Friday,August 07 2015]

தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் அணிந்து வாகனங்கள் ஓட்டி வருவதை பார்க்கின்றோம். சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைமுறைக்கு வந்துள்ள இந்த திட்டத்தை பிரபல நடிகை ஒருவர் தனது சொந்த ஊரில் நடைமுறைபடுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.


சமீபத்தில் சமூக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட 'புறம்போக்கு' படத்தின் நாயகி கார்த்திகா நாயர் தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் பொதுமக்களிடம் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த 'ஆபரேஷன் ஹெல்மெட்' என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த அமைப்பின் மூலம் திருவனந்தபுரம் உள்பட கேரளா முழுவதும் தன்னுடைய அமைப்பை சேர்ந்தவர்கள் ஹெல்மெட்டின் அவசியத்தை பொதுமக்களிடம் எடுத்து கூறுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதால் என்னுடைய உறவினர்களும், எனது பணியாளர்கள் சிலரும் உயிரிழந்துள்ளனர். எனவே சமூக அக்கறையுடன் மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் பாதிக்கப்பட்டவர் என்ற அடிப்படையில் ஹெல்மெட்டின் அவசியத்தை மக்களுக்கு எடுத்து சொல்லவே இந்த அமைப்பை தொடங்கியுள்ளோம். தற்போது இந்த அமைப்பில் 36 பேர் உள்ளனர். இவர்கள் ஆறு பேர்கள் கொண்ட குழுக்களாக இந்த பணியை செய்து வருகின்றனர். காவல்துறை அதிகாரிகள் கையெழுத்திட்டு கொடுத்துள்ள ஹெல்மெட் குறித்த விழிப்புணர்ச்சி அட்டைகளை இவர்கள் பொதுமக்களிடம் வழங்குவார்கள். எங்கள் அமைப்பின் முயற்சியால் ஒரே ஒரு நபர் ஹெல்மெட் அணிந்தால்கூட எங்களுக்கு அது வெற்றியே" என்று கூறியுள்ளார். நல்லெண்ணத்துடன் சமூக அக்கறையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள கார்த்திகாவின் பணி வெற்றி பெற நமது வாழ்த்துக்கள்.