விஜயகாந்த் பாணியை பின்பற்றும் 'கோ 2' படக்குழு

  • IndiaGlitz, [Saturday,March 12 2016]

தேமுதிக என்ற கட்சியை நடத்தி வரும் கேப்டன் விஜயகாந்த் வரும் தேர்தலில் தனித்து போட்டி என்ற பரபரப்பான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இதே வாசகங்களுடன் கூடிய விளம்பரத்துடன் ஒரு திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது.


அந்த படம்தான் 'கோ 2. இந்த படத்தின் விளம்பரம் ஒன்று நாளிதழ்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இன்று வெளிவந்துள்ளது. இந்த விளம்பரத்தில் 'யாருடனும் கூட்டணி கிடையாது. தனித்து வருகிறோம்' என்ற வாசகங்கள் அடங்கியுள்ளது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் களம் என்பதாலும், தற்போது தமிழகத்தில் தேர்தல் சீசன் என்பதாலும், வித்தியாசமாக வெளிவந்துள்ள இந்த விளம்பரத்திற்கு நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளது.

பாபிசிம்ஹா, பிரகாஷ்ராஜ், நிக்கி கல்ராணி, பாலசரவணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சரத் இயக்கியுள்ளார். லியோ ஜேம்ஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை எல்ரெட்குமார் தயாரித்துள்ளார். இவர்தான் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கோ' படத்தையும் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.