ஃபயர் தெறிக்க வேறலெவல் பேட்டிங்… நடப்பு சாம்பியனை காலிசெய்த கொல்கத்தா!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் 14 சீசன் தொடரின் இரண்டாம்கட்ட போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 34 ஆவது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸை பேட்டிங்கில் தெறிக்கவிட்ட கொல்கத்தா அபார வெற்றிப்பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் குயின்டன்டி காக் ஆகிய இருவரும் களம் இறங்கினர். இதைத்தொடர்ந்து நிதானமாக ஆடி ரன்களை குவித்து வந்த நிலையில் ரோஹித் சர்மா 33 பந்துகளில் 30 ரன்களை எடுத்து கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து களம் இறங்கிய டி20 உலகக்கோப்பை நம்பிக்கை நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் வெறும் 5 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
அடுத்துவந்த இஷான் கிஷனும் 14 ரன்களுக்கு அவுட்டானார். ஐபிஎல் போட்டிகளில் 422 ரன்களை எடுத்து ஐபிஎல் போட்டிகளிலேயே அதிக ரன்களை எடுத்த ஷிகர் தாவனுக்குப் பதிலாகத்தான் இவர் டி20 உலகக்கோப்பை போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இருவரும் கடந்த 2 போட்டிகளில் சொதப்புவதைப் பார்த்து பிசிசிஐ குழம்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இஷான் கிஷனைத் தொடர்ந்து களமிறங்கிய க்ருனால் பாண்ட்யா வெறும் 12 ரன்களுக்கு அவுட்டானார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியினர் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே குவித்து இருந்தனர்.
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய கொல்கத்தா அணியின் ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலர்களை மிரட்டி இருந்தனர். அதுவும் முதல் ஓவரில் கில் ஒரு சிக்ஸரை அடிக்க இரண்டாவது சிக்ஸரை வெங்கடேஷ் ஐயர் அடித்தார். போல்ட் பாலாக வந்த அந்த பந்தை வந்த வேகத்தைவிட இரண்டு மடங்கு வேகத்தில் தெறிக்கவிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் பொங்கி வழிந்ததும் குறிப்பிடத்தக்கது.
கில் 13 ரன்களில் அவுட்டாக வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளுக்கு 50 ரன்களை எடுத்திருந்தார். அடுத்துவந்த ராகுல் திரிபாதி அரைச்சதம் அடிக்க நேற்று கடைசிவரை கொல்கத்தா அணி வீரர்களிடம் ஆதிக்கம் செலுத்த முடியாமல் மும்பை அணியின் பவுலர்கள் திணறியது அப்பட்டமாகத் தெரிந்தது. இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 15.1 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை குவித்து அபார வெற்றிப்பெற்றனர்.
இதனால் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை கொல்கத்தா அணி படு அசத்தலாக வெற்றிப்பெற்றுள்ளது. மேலும் கொல்கத்தா 0.36 ரன் ரேட்டிங்குடன் 4 ஆவது இடத்திற்கு முன்னேறியது. அதேபோல இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 4 முறை கொல்கத்தா வெற்றிப்பெற்றுள்ளது. இதற்கு மாறாக இதுவரை 9 போட்டிகளில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ 5 தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் 6 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout