'சாட்டை' 2ஆம் பாகத்தில் முக்கிய வேடத்தில் கிஷோர்

  • IndiaGlitz, [Wednesday,May 18 2016]

சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடிப்பில் எம்.அன்பழகன் இயக்கத்தில் ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த 'சாட்டை' திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அதே ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் சமுத்திரக்கனிக்கு பதிலாக கிஷோர் நடிக்கவுள்ளதாகவும் மற்றும் முக்கிய வேடத்தில் தம்பிராமையா நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது என்றும் கூறப்படுகிறது.

பல முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்த கெளதம் 'சாட்டை 2' படத்தை இயக்கவுள்ளார். முதல் பாகம் போலவே இந்த இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் மைனா, மொசக்குட்டி, சவுகார்பேட்டை போன்ற படங்களை ஏற்கனவே தயாரித்துள்ளது. தற்போது இந்த நிறுவனம் தயாரித்து வரும் 'பொட்டு' படத்தில் பரத் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை வடிவுடையான் இயக்கி வருகிறார். அம்ரீஷ் இசையமைக்கும் இந்த படம் ஒரு த்ரில் படமாக உருவாகி வருகிறது.