கிருமி- திரைவிமர்சனம் : யதார்த்த சாயல் கொண்ட கமர்ஷியல் படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமா வரலாற்றில் அதிக விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்து வணிகரீதியாகவும் பெரிய வெற்றிபெற்ற படங்களின் வரிசையில் இணைந்த காக்கா முட்டை` படத்தின் இயக்குனர் மணிகண்டனின் பெயர் தாங்கி வந்திருக்கும் இரண்டாவது படம் `கிருமி`. ஆனால் இந்தப் படத்தில் கதை-திரைக்கதையை மட்டுமே அவர் அறிமுக இயக்குனர் அனு சரணுடன் இணைந்து எழுதி இருக்கிறார்.
மணிகண்டனின் பெயரும் சில மாதங்களுக்கு முன் வெளியான ட்ரைலர் ஏற்படுத்திய ஈர்ப்பும் இந்தப் படம் திரைப்பட ரசிகர்கர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்த உதவின. அந்த ஆவலைத் `கிருமி` படம் தக்கவைக்குமா?
திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தகப்பனாக இருக்கும் கதிர் (கதிர்) வேலையின்றித் திரிகிறான். அவன் மீது அக்கறை கொண்ட பிரபாகர் (சார்லி) போலீஸுக்கு உளவறிந்து சொல்பவராக இருக்க அவரது உதவியுடன் காவல்நிலையத்தில் காவலர்களுக்கு உதவியாக நியமிக்கப்படும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவில் ஒருவனாகிறான். அவனது பணித் திறமையாலும், புத்திசாலித்தனத்தாலும் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சுவுந்தரபாண்டியனின் (டேவிட்) மனதுக்கு நெருக்கமான உதவியாளனாகிறான்.
அருகில் இருக்கும் பகுதியில் வேறொரு காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டுக்கு கீழ் வரும் மது விற்பனை பார் ஒன்றில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடக்கும் தகவலை கதிரின் மூலம் தெரிந்துகொள்கிறார் சுந்தரபாண்டியன். அனுபவஸ்தரான பிரபாகரனின் எச்சரிக்கையை மீறி சவுந்தரபாண்டியன அந்த பாரில் சோதனையிட்டு தவறான வழியில் சேர்க்கப்பட்ட பணத்தை கைப்பற்றி பாரின் உரிமையை ரத்து செய்ய உதவுகிறான் கதிர்.
இதைச் செய்ததால் போலீஸுக்கும் குற்றவாளிகளுக்குமிடையிலான குற்ற வலைபின்னலில் தான் சிக்கிக்கொண்டுவிட்டதை உணர்கிறான். இந்தப் படிப்பிணைக்கு ஒரு பெரிய விலையும் கொடுக்கிறான். இப்போது அவனது உயிரையும் குடும்பத்தையும் பழிவாங்க குற்றவாளிகள் காத்திருக்கிறார்கள்.
இதிலிருந்து கதிரும் அவனது குடும்பமும் தப்பினவா? பணமும் ரத்தமும் நிறைந்த இந்த யுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் என்ன செய்தார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் திரையில் காண்க.
படத்தின் கதையும் அது தாங்கி நிற்கும் செய்தியும் யதார்த்தத்துடன் பொருந்துகிறது. மற்றவர்களைவிட பெரியவர்களாக தங்களை நினைத்துக்கொண்டு பெரிய விவகாரங்களில் தலையைக் கொடுப்பவர்களை எச்சரிக்கிறது. நிம்மதியாக குடும்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் ஹீரோயிசக் கனவுகளை ஒதுக்கிவைய்யுங்கள் என்று சொல்கிறது.
இதுபோன்ற யதார்த்தமான செய்தியை கமர்ஷியல் சினிமாவின் எல்லைகளுக்குள் அதற்குத் தேவையான அம்சங்களில் பெரிய குறை வைக்காமல் சொல்லியிருப்பது பெரிதும் பாராட்டத்தக்கது. அதைத் தவிர காவல்துறை அதிகாரிகளுக்கு இடையில் இருக்கும் அதிகாரப் போட்டி,அல்லது பொறாமை, போலீஸ் இன்ஃபார்மர்களின் அபாயகரமான வாழ்க்கை ஆகிய இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத விஷயங்களை விவரிக்கிறது இந்தப் படம். காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட், சண்டைக் காட்சிகள், ஹீரோயிசம், என் கமர்ஷியல் படங்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் சரியான விகிதத்தில் ரசிக்கத்தக்க வகையில் அமைந்திருக்கின்றன
இத்தனை சிறப்புகள் இருந்தாலும் தொடக்கத்தில் கதாபாத்திரங்களின் பின்னணியை அவற்றுக்கிடையிலான உறவுகளைப் பதிவு செய்ய அளவுக்கதிகமான நேரம் எடுத்துக்கொண்டிருப்பது சற்று பொறுமையை சோதிக்கிறது. படத்தின் முடிவு யதார்த்தமானதாக இருப்பது ஏற்கத்தக்கதுதான். ஆனால் அதற்கு முன்பாக பரபர சேஸிங் மற்றும் ஆக்ஷன் காட்சிகளும், நாயகனுக்கு இழைக்கபப்டும் துரோகம் குறித்த விவரிப்புகளும் இருப்பதால் க்ளைமேக்ஸில் பெரிதாக ஏதோ நடக்கப்போகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது இதுவே இறுதியில் சற்று ஏமாற்றமாகவும் அமைந்துவிடுகிறது.
`மதயானைக்கூட்டம்` படத்திலிருந்து வெகுதூரம் முன்னேறியிருக்கிறார் கதிர், பாத்திரத்துக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் சரியாகத் தர கடுமையாக உழைத்து பெருமளவில் வெற்றியும் பெற்றிருக்கிறார். கண்களால் உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதம் குறிப்பிட்டுப் பாராட்டத்தக்கது. ஆனால் நடனத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் நல்லது.
அளவான பாத்திரத்தில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பப் பெண்ணை கண்முன் நிறுத்துகிறார் கதிரின் மனைவியாக நடித்திருக்கும் ரஷ்மி மேனன். மூத்த நடிகர் சார்லி தன் அசாத்திய நடிப்புத் திறமைக்கு சரியான தீனி போடும் வேடத்தை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். சார்லியின் உடல் ஊனமுற்ற மனைவியாக நடித்திருக்கும் தமிழ்செல்வி மனதைத் தொடும் நடிப்பை வழங்கியிருக்கிறார். அதிகாரத் தோரணை மிக்க காவல்துறை அதிகாரி வேடத்துக்கு சரியாகப் பொருந்துகிறார் டேவிட்.
கே-வின் பின்னணி இசை காட்சிகளுக்குத் துணை நிற்கிறது. பாடல்கள் பரவாயில்லை. அருண் வின்செண்டின் ஒளிப்பதிவில் இருக்கும் நீலநிறச் சாயல் சென்னைக்குப் புது அழகைத் தருகிறது. படத்தொகுப்பையும் இயக்குனரே கவனித்திருக்கிறார். முதல் பாதியில் சில நீளமான் காட்சிகளுக்கு சற்று கத்திரி போட்டிருக்கலாம்.
யதார்த்த அம்சத்துடன் கூடிய கமர்ஷியல் படமாக வெளிவந்திருக்கும் கிருமி` படத்தில் சில குறைகளும் ஏமாற்றங்களும் இருந்தாலும் நிச்சயமாக ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.
மதிப்பெண்- 2.5/5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout