ஜோகோவிச்சிடம் பரிசுப் பெற்ற சிறுவன்… உணர்ச்சிப் பொங்கும் வைரல் வீடியோ!
- IndiaGlitz, [Tuesday,June 15 2021] Sports News
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று முடிந்தது. நேற்று நடைபெற்ற இதன் இறுதிப் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச் இரண்டாவது முறையாக பிரெஞ்ச் கிராண்ஸ்ட்லாம் பட்டத்தை வென்றார். இந்தப் போட்டி முடிந்தவுடன் மைதானத்தில் இருந்து கிளம்பிய ஜோகோவிச் கேலரியில் இருக்கும் ஒரு சிறுவனைக் கவனித்தார். அவன் அருகில் சென்ற ஜோகோவிச் அந்தச் சிறுவனுக்கு தனது ராக்கெட்டை பரிசாக வழங்கினார்.
ஜோகோவிச்சின் தீவிர ரசிகனான அந்தச் சிறுவன் ராக்கெட்டை பெற்றவுடன் அளவுகடந்த உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்தினான். மேலும் உச்சக்கட்ட சந்தோஷத்திற்கு சென்ற அந்தச் சிறுவன் செய்வதறியாது திக்கு முக்காடிபோன வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது.
செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் இதுவரை 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாசை கடும் போட்டிக்கிடையே தோற்கடித்தார். இதனால் இரண்டாவது முறையாக பிரெஞ்ச் கிராண்ஸ்ட்லாம் பட்டத்தை வென்றார். இதைத் தவிர்த்து ஆஸ்திரேலிய ஓபன் பட்டதை 9 முறையும் விம்பிள்டனை 5 தடவையும் அமெரிக்க ஓபனையும் 3 முறையும் கைப்பற்றியுள்ளார்.
இதனால் 52 ஆண்டுகளில் 4 வகையான கிராண்ஸ்ட்லாம் போட்டிகளிலும் குறைந்தது 2 முறை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் இதுவரை பெடரர் (சுவிட்சர்லாந்து), நடால் (ஸ்பெயின்) இருவரும் 20 கிராண்ஸ்ட்லாம் பட்டங்களை வென்று முதல் இடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் ஜோகோவிச் உள்ளார். இன்னும் ஒரு போட்டியில் வெற்றிப்பெறும் போது இவரும் முதல் இடத்திற்கு சென்றுவிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜோகோவிச்சிடம் இருந்து ராக்கெட்டை பரிசாக பெற்ற சிறுவனின் உணர்ச்சிப் பொங்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.