குழந்தைகள் விரும்பி உண்ணும் நூடுல்ஸ் உடலுக்கு நல்லதா??? நூடுல்ஸ் பிறந்த கதை!!!
- IndiaGlitz, [Wednesday,July 08 2020]
உருவத்தில் நம்ம ஊரு இடியாப்பத்தைப் போலவே இருக்கும் நூடுல்ஸ் உலகம் முழுவதும் விரும்பப்படும் ஒரு உணவு வகையாக இருக்கிறது. இதன் உணவு வகையை சீனர்கள் சத்தான ஆகாரமாகவே கருதுகின்றனர். மேலும் கி.மு காலத்தில் இருந்தே இந்த உணவு வகை சீனாவில் படு பிரபலமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படியிருக்கிற ஒரு உணவை நம்மூர் பெற்றோர்கள் உடலுக்குக் கெடுதியான உணவாகக் கருதுகின்றனர். இதற்கு அடிப்படைக் காரணம் தற்போது உள்ள நவநாகரிக உணவு தயாரிப்பு முறை என்றுதான் சொல்ல வேண்டும். கலர் கலரான பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டு கூடவே பொடி சேர்க்கப்பட்ட பாக்கெட்டும் உள்ளே இருக்கும் வகையிலான நூடுல்ஸ்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மிகவும் பிரபலம். ஏன் ஏழைநாடுகளில் உள்ள சமானிய மக்களுக்கு மிகவும் எளிதாக கிடைக்கும் உணவாகவும் இது இருக்கிறது.
முதன் முதலில் சீனர்கள்தான் இந்த நூடுல்ஸ் உணவைக் கண்டுபிடித்தததாக வரலாறு சொல்கிறது. சீனாவில் ஹான் வம்சம் ஆட்சியில் இருந்தே போதே அதாவது (கி.மு 206 முதல் - கி.பி 220) வரையிலான காலக்கட்டத்தில் இந்த உணவு இருந்ததாகக் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த உணவு பழக்கத்தில் இருந்திருக்கிறது. லாஜியா என்ற இடத்தில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் மண்பாண்டத்தில் சமைக்கப்பட்ட நூடுல்ஸ் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த நூடுல்ஸ் மில்லட் கிராஸ் என்ற தானியத்தில் உருவாக்கப் பட்டது எனவும் கூறப்படுகிறது. சீனாவில் இதுவொரு உணவு முறையாக மட்டுமல்ல, நீண்டு ஆயுளுக்கான ஒரு சிறந்த உணவு வழிமுறையாகவும் கருதப்படுகிறது.
பொதுவாக நூடுல்ஸ் என்பது ஈஸ்ட் கலக்காமல் கோதுமை மாவில் செய்யப்படும். கம்பி போல சுருள் சுருளாக இருக்கும் இந்த உணவை சுடு நீரில் போட்டு எடுத்தால் தயாராகிவிடும் அளவிற்கு மிகவும் மிருதுவாகத் தயாரித்து இருப்பார்கள். தையமின், சியாஸின், ரிபோஃப்ளே போன்ற உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் இதில் இருப்பதாகவும் கருதப்படுகிறது. மிகவும் முக்கியமான விஷயம் இந்த வகை நூடுல்ஸில் கொழுப்பு மிகவும் குறைவு.
சீனாவில் பழங்காலத்தில் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ் வகைகளில் பெரும்பாலும் தானியங்களே பயன்படுத்தப் பட்டு இருக்கின்றன. தானியங்களோடு இறைச்சிப் பொருட்களையும் கலந்து உண்ணும் பழக்கம் இப்போதுதான் நடைமுறைக்கு வந்து இருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின் ஜப்பானில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையின்போது நூடுல்ஸ் முக்கிய உணவுப் பொருளாக இருந்ததாம். சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டங்களில் இந்த நூடுல்ஸ் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
உடனடி நூடுல்ஸ் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு மொமோஃபுகு என்ற ஜப்பானியரால் கண்டுபிடிக்கப் பட்டது. கோதுமை மாவு, அத்யாவசிய உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் நூடுல்ஸ் மட்டுமல்லாது தற்போது அனைத்து வகையான பொருட்களில் இருந்தும் நூடுல்ஸ் தயாரிக்கப் படுவது வாடிக்கையாகி விட்டது. பேக்ட், பேசிக், சில்ட், ஃப்ரைட், சூப், இன்ஸ்டன்ட், சைனீஸ், ஜாப்பனீஸ், கொரியன், ஃபிலிப்பினோ போன்று எத்தனையோ வகையான நூடுல்ஸ் முறைகளும் வந்துவிட்டது. ஜப்பானில் நூடுல்ஸ் உணவுகளை உண்பதற்கு என்று ஒரு தனி அருட்காட்சியகமே இருக்கிறது. அதில் 4500 வகையான நூடுல்ஸ் விற்கப்படுகிறதாம்.
தாய்லாந்து உணவுகளில் நூடுல்ஸ் பிரதான இடத்தைப் பெறுகிறது. கொரியர்கள் இந்த உணவில் ஐஸ்கட்டிகளையும் கலந்து உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பெரும்பாலான நாடுகளில் இந்த உணவோடு சேர்த்து விலங்குகளின் இறைச்சி, முட்டை, கொழுப்பு பொருட்களைக் கலந்து உண்ணும் பழக்கம் இருந்து வருகிறது. மேலும் சில நாடுகளில் அக்டோபர் 6 என்ற தேதியை நூடுல்ஸ் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. விண்வெளி வீரர்களுக்கான துரித உணவாகக் கூட இந்த வகை உணவுகள் தற்போது பிரத்யேகமாக தயாரிக்கப் படுகின்றன. நூடுல்ஸ் என்ற பழங்கால உணவு முறை மிகவும் நேர்த்தியான வழிமுறைகளில் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியதாகத்தான் இருந்திருக்கிறது.
ஆனால், இன்றைக்குத் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் வகைகளில் சோயா அதிகளவு சேர்க்கப்படுவதாகவும் உணவு நல ஆலாசகர்கள் குற்றம் சுமத்துகின்றனர். காரணம் மனித உடலுக்கு சோயா பல நேரங்களில் கெடுதல் தரும் விஷயமாக மாறிவிடுகிறது. அதிலும் முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் இந்த வகை உணவுகளை தவிர்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர். குழந்தைகள் அதிகளவில் உண்ணும்போது அவர்களுக்கும் சிக்கல் ஏற்படுகிறது. இதற்கு காரணம் தற்போதுள்ள நூடுல்ஸ் தயாரிப்பில் சோடியம் அதிகளவில் கலக்கப்படுகிறது. இதுவும் உடலுக்கு மிகவும் கெடுதலைத் தரக்கூடியதாக இருக்கிறது. தயாரிப்பு முறைகளை மேம்படுத்தினால் மிகச்சிறந்த உணவாக இந்த நூடுல்ஸ் உணவு மேம்பாட்டில் சிறந்த இடத்தைப் பிடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.