பெண்களைக் கடத்தி கட்டாயத் திருமணமா??? காலங்காலமாகத் தொடரும் வன்முறை பழக்கம்!!!
- IndiaGlitz, [Wednesday,July 22 2020]
இந்தோனேசியா எல்லைக்குட்பட்ட சும்பா தீவில் ஒரு விசித்திரமான பழக்கம் இருப்பதாகத் தற்போது பரபரப்பு கிளம்பியிருக்கிறது. இத்தீவில் கிறிஸ்தவம், முஸ்லீம் தவிர மராபு என்ற மற்றொரு பழமையான மதத்தைப் பின்பற்றும் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் பெண்களுக்கு விருப்பம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவர்களைக் கடத்தி கட்டாயத் திருமணம் செய்து வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர் என்றும் மேலும் இப்பழக்கம் காலங்காலமாகத் தொடருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இப்பகுதியில் ஒரு பெண்ணை கடத்தியது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது அந்நாட்டில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்தோனேசிய அரசு இப்படி பெண்களின் மீது தொடுக்கப்படும் வன்முறை பழக்கத்திற்கு முடிவுக் கட்டப்படும் என உறுதியளித்து இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் 7 பெண்கள் கடத்தப்பட்டு இருப்பதாக அப்பகுதியில் இயங்கிவரும் பெண்களின் உரிமைக்கான குழு தகவல் தெரிவித்துள்ளது. இப்படியான சர்ச்சசைக்குரிய வழக்கத்தில் உறவினர்களே ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. தந்தைக்குச் சொந்தகாரர்களோ அல்லது அவர்களின் நண்பர்களோ மணமகளைக் கடத்திக் கட்டாயத் திருமணத்தைச் செய்து வைத்து விடுகின்றனர். கடத்தி விட்டு பெண்களின் நெற்றியில் வெறுமனே தீண்ணீரை வைத்து விட்டால் மட்டும் போதுமானது. அதற்குப் பின் பெண்கள் வெளியே போகக்கூடாது என்ற நம்பிக்கை அப்பகுதியில் வலுவாக இருந்து வருகிறது.
ஒருவேளை பெண் கடத்தப்பட்ட பின்பு திருமணத்திற்கு சம்மதிக்காமல் முரண்டுபிடித்தால் அவர்களை வீடுகளில் அடைத்து வைப்பதும் உண்டு. அப்படி அடைத்து வைக்கும்போது கடத்தியவர்கள் கொடுக்கும் உணவை உண்டுவிட்டால் போதுமானது, திருமணத்திற்கு சம்மதித்து விட்டாள் என்று திருமணத்தை நடத்தி விடுவார்களாம். இந்த சர்ச்சைக்குரிய பழக்கம் ஆதியில் இருந்து தொடரவில்லை என்றும் சமீப ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடும் சிலர் கொண்டுவந்த பழக்கம்தான் இது என்றும் சும்பா தீவைக் குறித்து ஆய்வு செய்த வரலாற்று பேராசிரியர் ஃபிரான்சிஸ் வோரா தெரிவித்து உள்ளார். அப்பகுதியில் உள்ள சிலரும் இது எங்கள் மத்தின் ஆதி பழக்கம் இல்லை. சமீபக் காலங்களில் வந்ததுதான். இந்தப் பழக்கத்தை ஒழிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.