'கிடா' படத்தின் காட்சியை ரத்து செய்துவிட்டார்கள்: இயக்குனரின் வேதனை பதிவு..
- IndiaGlitz, [Tuesday,November 14 2023]
இயக்குனர் ரா வெங்கட் இயக்கத்தில் உருவான ’கிடா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு போதுமான பார்வையாளர்கள் இல்லை என சென்னை திரையரங்கம் காட்சியை ரத்து செய்து விட்டதாக இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் திரை உலகின் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் காளி வெங்கட் நடிப்பில் வெளியான ’கிடா’ திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. ரா வெங்கட் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூ ராமு, பாண்டியம்மா, லோகி, கமலி உள்பட பலர் நடித்துள்ளனர். ஒரு சிறுவனுக்கும் அந்த சிறுவனின் தாத்தாவுக்கும் இடையில் உள்ள உறவு மற்றும் சிறுவனுக்காக ஆட்டை விற்கும் கதையம்சம் கொண்ட இந்த படம் தீபாவளி விருந்தாக வெளியானது.
தீபாவளிக்கு ஏற்கனவே இரண்டு பெரிய படங்கள் வெளியாகி இருந்ததால் இந்த படத்திற்கு போதுமான தியேட்டர் கிடைக்காத நிலையில் ஒரே ஒரு காட்சி மட்டும் சில தியேட்டரில் வெளியானது. ஆனால் அந்த காட்சியும் போதுமான பார்வையாளர்கள் இல்லை என ரத்து செய்துவிட்டதாக இயக்குனர் வெங்கட் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது
இன்று காலை என் நண்பர்கள் இருவர் கிடா படம் பார்க்க காசி டாக்கீஸ் போயிருக்கிறார்கள்.. கூடவே ஒரு எட்டு பேரும் கிடா எடுக்க வந்திருக்கிறார்கள் ஆனால் தியேட்டர் நிர்வாகம் பதினைந்து பேர் இருந்தால் தான் படம் போடுவோம் என்றிருக்கிறார்கள்..
நண்பர்கள் பரவாயில்லங்க பதினைஞ்சு டிக்கெட் தான நாங்களே இ்ன்னும் அஞ்சு டிக்கெட் எடுக்கிறோம்னு சொல்லியும் படம் போடல.. ஷோ கேன்சல்... எங்கோ ரிவியூ படிச்சிட்டு படம் பார்க்க வர்றவங்ககிட்ட என்ன பதில் சொல்றதுன்னு எனக்கும் தெரியல.. நல்ல படம்னு தேடி வந்தோம்னு சொல்றாங்க.. ஆனா ஷோ கேன்சல்.. இப்படிலாம் நடக்கும்னு தெரிஞ்சு தான சின்னபடங்கள் வருதுன்னு நீங்க சொல்லவர்றது தெரியுது.. ஆனா ஆதங்கத்த எங்க கொட்டுறது .. அதான் இத ஷேர் பண்ணுனேன்..
மதுரையில ஒரு ஷோ தான் குடுத்தாங்க அங்கயும் இப்ப ஷோ காட்டல.. மக்களே உங்களின் அருகே எதோ ஒரு ஷோ கிடா ஓடுச்சுன்னா போய் பாருங்க.. கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.. நன்றி