சுந்தர் சிக்கு அரசியல் கற்று கொடுத்த குஷ்பு

  • IndiaGlitz, [Thursday,May 26 2016]

பிரபல நடிகை குஷ்பு நடிகையாக மட்டுமின்றி அரசியலிலும் பிரபலமான ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. திமுகவில் சில ஆண்டுகள் இருந்த குஷ்பு தற்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளராக பதவி வகித்து வருகிறார். நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக அவர் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குஷ்புவின் கணவரும் பிரபல இயக்குனருமான சுந்தர் சி தற்போது 'முத்தின கத்தரிக்கா' என்ற படத்தில் அரசியல்வாதியாக நடித்து வருகிறார். இந்த அரசியல்வாதி கேரக்டருக்காக குஷ்பு தனது அரசியல் அனுபவங்கள் குறித்து சுந்தர் சியிடம் பகிர்ந்து கொண்டதாகவும், குஷ்பு கொடுத்த டிப்ஸ் மூலம் சுந்தர் சி தனது அரசியல்வாதி கேரக்டரை மெருகேற்றி கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சுந்தர் சி, பூனம் பாஜ்வா, சதீஷ், கிரண், வைபவ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'வெள்ளிமூங்கா' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட்ராகவன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.