கனத்த இதயத்துடன் விலகுகிறேன்.. குஷ்பு அறிவிப்பால் பாஜகவினர் அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Sunday,April 07 2024]

நடிகை குஷ்பு கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுகிறேன் என்று அவர் பாஜக மேலிடத்திற்கு கடிதம் எழுதி அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில் நடிகை குஷ்பு கடந்த சில நாட்களாக பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் திடீரென தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தான் விலகுவதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த விபத்து காரணமாக தனது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த காயம் தன்னை பாதிப்படைய செய்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று மருத்துவ குழுவினர் அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் பாஜக காரியகர்த்தாவாக தொடர்ந்து பிரச்சாரம் செய்ததாகவும் இந்த நிலையில் தனக்கு தற்போது வலி மற்றும் வேதனை அதிகரித்துள்ளதால் உடல்நிலை பாதிப்படைந்து உள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கனத்த இதயத்துடன் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாகவும் இந்த இக்கட்டான நேரத்தில் தன்னால் கட்சிக்கு பங்களிப்பு செய்யவில்லை என்ற மன வருத்தம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் சமூக வலைதளம் மூலம் பாஜகவின் கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துச் செல்வேன் என்றும், பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பேன் என்றும் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்க இருப்பதை நான் எங்கிருந்தாலும் ஆரவாரத்துடன் ஆதரவு தெரிவிக்க காத்திருக்கிறேன் என்றும் குஷ்பு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.