'கேஜிஎஃப்' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் 'விக்ரம்' - 'சூரரைப்போற்று கனெக்சன்!
- IndiaGlitz, [Friday,September 30 2022]
’கேஜிஎஃப்’ மற்றும் ’கேஜிஎஃப்’ 2’ ஆகிய பிரம்மாண்டமான படங்களை தயாரித்த நிறுவனம் அடுத்து தயாரிக்க உள்ள திரைப்படத்தில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ மற்றும் சூர்யாவின் ‘சூரரைப்போற்று கனெக்ஷன் இருப்பது தெரியவந்துள்ளது.
’கேஜிஎஃப்’ மற்றும் ’கேஜிஎஃப் 2’ உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பகத் பாசில் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்க உள்ளனர். சமீபத்தில் வெளியான ’விக்ரம்’ படத்தில் பகத் பாசில் சூப்பராக நடித்து இருந்தார் என்பதும் அபர்ணா பாலமுரளி ’சூரரைப்போற்று’ படத்திற்காக தேசிய விருது பெற்றவர் என்பதும் தெரிந்ததே.
’தூமம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படத்தை பிரபல கன்னட இயக்குனர் பவன் குமார் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’லூசியா’ உள்பட ஒருசில சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 9ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் தமிழ் உள்பட 4 மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.