மனதை உருக்கும் ஒரு புகைப்படம் – உயிர்க் கொடுத்தவரையே காவு வாங்கிய வரலாற்று பின்னணி
Send us your feedback to audioarticles@vaarta.com
வரலாற்றில் ஒரு புகைப்படம், உலக அரசியலையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. அதே புகைப்படம் தனக்கு உயிர் கொடுத்தவரான கெவின் கார்ட்டரையும் காவு வாங்கியிருக்கிறது. இது ஏதோ அரசியல் காரணங்களுக்காக நடத்தப் பட்ட கொலை அல்ல. மனதை உருக்கி, தன்னை வஞ்சகனாக உணர வைத்து, உயிரையே குடித்த ஒரு சோகக் கதை.
நாம் பல நேரங்களில் புகைப்படங்களைப் பார்க்கும் போது மிக எளிதாகக் கடந்து போய் இருப்போம். ஆனால் கெவின் கார்ட்டர் எடுத்த புகைப்படம் உலகில் உள்ள யாரையும் எளிதாகக் கடந்து போகும்படி அனுமதிக்கவில்லை. சோகம், வலி, உயிருக்கான போராட்டம், பஞ்சம் என்ற ஒட்டுமொத்தத்தையும் ஒரு புகைப்படம் கண நேரத்தில் காட்சிப் படுத்தி இருக்கிறது. அந்தக் காட்சிதான் ஒரு நாட்டின் வறுமையை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற ஒரு ஊடகமாகவும் மாறிப்போனது.
யார் இந்த கெவின் கார்ட்டர் ?
சவுத் ஆப்பிரிக்காவில் நிற வெறி தாக்குதல் அதிகமாகி கொண்டிருந்த காலக்கட்டம். இன வேறுபாடுகளுக்கு இடையில் வளர்ந்த கெவின் கார்ட்டர் இதை ஒருபோதும் விரும்பாதவராக இருந்தார். மருத்துவத் துறையில் தனது படிப்பை தொடர விரும்பாத கெவின் இராணுவ சேவையில் இணைகிறார். பின்பு வான்படை, வானொலி எனப் படிப்படியாக தனது துறையை மாற்றிக் கொண்டே இருக்கிறார். அதுவும் கடினமாக இருந்ததால் புகைப்பட கலைஞராக மாறுகிறார். எளிமையான மனிதராக இருக்க விரும்பிய கெவின் இந்தத் துறைகளை எல்லாம் தட்டிக் கழித்ததில் பெரும் வியப்பு ஏதும் இல்லை. கெவினுக்கு நியூயார்க் டைம்ஸ் சவுத் ஆப்பிரிக்கன் செய்தித்தாளில் பணி கிடைக்கிறது.
நியூயார்க் டைம்ஸ் ”பின் மேன் கிளப்” என்ற ஒரு தனி திட்டத்தை வகுத்து ஆப்பிரிக்காவில் நடக்கும் போராட்டம், அடிதடி, இராணுவத் தாக்குதல் போன்றவற்றைக் தொகுக்கும் முயற்சியில் இறங்குகிறது. அதில் மிகவும் உற்சாகமாகப் பங்கு பெற்ற கெவின் ஆப்பிரிக்காவின் முகத்தையே ஒட்டுமொத்தமாகக் காட்சிப்படுத்தும் பல படங்களை எடுத்துக் குவிக்கிறர்.
எரிந்து கொண்டிருக்கும் மனிதன், இராணுவத் தாக்குதல், பெண்களின் அலறல், வெடி குண்டு தாக்குதல் என 100 க்கும் மேற்பட்ட அற்புதமான புகைப்படங்களை ஆப்பிரிக்காவின் நிலைமையை வெளிப்படுத்தும் விதத்தில் எடுத்துக் குவிக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் தான் நம்முடைய கெவின் கார்ட்டர் தெற்கு சூடானில் அற்புதமான ஒரு புகைப்படத்தை தனது கேமராவில் பதிவு செய்கிறார்.
சூடான் நிலப்பிரதேசம்
ஆப்பிரிக்க கண்டத்திலேயே அதிகப் பரப்பளவு கொண்ட நாடான சூடானை இரண்டாகப் பிரித்து வைத்துத்தான் பிரிட்டிஷ் அரசு ஆட்சி செய்து வந்தது. சூடானில் பிரிட்டிஷ் ஆதிக்கம் கொடிக் கட்டி பறந்த காலக் கட்டத்தில் இரண்டு பகுதிகளிலும் எதிர் பார்த்த வளர்ச்சியைப் பெற முடியவில்லை.
வடக்கு சூடானில் ஆரம்பத்தில் எகிப்தின் நாகரிகம் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது எனலாம். அதிக அரபி மொழி இங்கு புழக்கத்தில் இருந்தது. அதிகளவிலான முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆனால் பிரிட்டிஷ் தன் ஓர வஞ்சனையால் குறைந்த பொருளாதார சலுகைகளை மட்டுமே வடக்கு பகுதி மக்களுக்கு காட்டியது. தெற்கு சூடானில் பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவர்களாக மாற்றப் பட்டு இருந்தனர். கிறிஸ்தவர்களுக்கு பிரிட்டிஷ் அதிகளவு சலுகைகளை காட்டி பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது.
சூடானில் குடியரசு கிளர்ச்சி ஏற்படவே 1953 இல் பிரிட்டிஷ் சூடானுக்கு சுயாட்சி வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பிரிட்டிஷ் தனது கூடாரத்தை காலி செய்தவுடன் பிரச்சனை சூடானில் துளிர்விடுகிறது. வடக்கு சூடான் அதிகாரம் முழுவதையும் கையில் எடுத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்த முற்படுகிறது. இதனால் தெற்கின் நிலைமை பாதாளத்திற்குத் தள்ளப் படுகிறது. காரணம் வடக்கு – முஸ்லீம் களின் பகுதியாகவும், தெற்கு – கிறிஸ்துவர்களின் இருப்பிடமாகவும் இருக்கும் பட்சத்தில் முரண்பாடுகள் அதிகரிக்கின்றன. வடக்கு சூடானின் ஆதிக்கம் மத ரீதியாகவும் கட்டமைக்கப் படுகிறது.
1955 இல் சூடானில் கடும் உள்நாட்டு போர் தொடங்குகிறது. வடக்கில் இராணுவத்தின் ஆதிக்கமும் தெற்கில் மக்கள் விடுதலை போராட்ட படைகளுக்கும் இடையே கடுமையான மோதல்களுக்கிடையில் 1972 இல் தெற்கு சூடான் தனியாக பிரிக்கப் படுகிறது. இந்த போராட்டங்களுக்கு நடுவில் பல லட்ச கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். மீண்டும் தெற்கு சூடானுக்கு பிரச்சனை எண்ணெய் ரூபத்தில் ஆரம்பிக்கிறது என்றே சொல்லலாம். தெற்கு சூடானில் எண்ணெய் வளம் இருப்பதைக் கண்டுபிடித்த ஒரு வடக்கு சூடான் கம்பெனி, வளத்தை பயன்படுத்திக் கொண்டு வருவாய் முழுவதையும் எடுத்துக் கொள்கிறது. இதன் விளைவால் 1983 இல் மீண்டும் உள்நாட்டுப் போர் ஆரம்பம்.
எண்ணெய் வளத்தை மையமாகக் கொண்டு 2005 கலவரங்கள் தொடர்ந்தன. இதற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் சூடான் வறுமையின் உச்சத்திற்கு தள்ளப் பட்டது என்பதுதான் கொடுமை. எங்குப் பார்த்தாலும் வறட்சி, பசி, பஞ்சம், தொற்று நோய்கள், படுகொலை, மனித உயிர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் அத்து மீறல்கள் என அந்நாட்டில் உயிர் வாழ்வதற்கான குறைந்த பட்ச வசதிகளும் காணாமல் போகிறது. கொடிய நோய்கள் மக்களை தாக்குகின்றன. பல லட்ச கணக்கான மக்கள் அகதிகளாக மாற்றப் படுகின்றனர். வடக்கு சூடானின் இராணுவ அதிகாரத்தின் கீழ் நாடே சின்னா பிண்ணமாகிறது. இத்தகையதொரு உள்நாட்டு கலவரங்களில் எந்த ஒரு அண்டை நாடுகளும் தலையிட வில்லை என்பதே வரலாற்றில் அவலங்களின் உட்சம்.
சூடானின் நிலமையை வெளிக்கொணரும் விதத்தில் கொடுக்கப் பட்ட ஒரு வேலைக்காக கெவின் கார்ட்டர் மூன்று பேருடன் பயணமாகிறார். சூடானின் பல பகுதிகளுக்கு சென்று புகைப்படம் எடுக்கிறார். ஒரு நாள் தனது பணியை முடித்து விட்டு இருப்பிடத்திற்கு திரும்பும்போது ஐயோட் என்ற கிராமத்தில் உள்ள ஒரு கேம்ப்பை ஒட்டிய பகுதியில் ஒரு காட்சியைப் பார்க்கிறார். தனது கேமிராவை எடுக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் பதிவு செய்யப் படவேண்டும் என்ற உந்துதல் அவரைத் தள்ளுகிறது.
காட்சியில் வலுவிழந்த, உடலில் நடக்கக் கூட சக்தியில்லாத ஒரு சிறு பெண் குழந்தை உணவு வழங்கும் கேம்ப் பிற்கு தனது உடலை நகர்த்திக் கொண்டு செல்கிறது. அந்தக் குழந்தையை பின்தொடர்ந்து ஒரு பிணந்திண்ணும் கழுகு தன் இறக்கையை விரிக்காமல் சுமார் 20 நிமிடங்களாக அதே இடத்தில், நிற்கிறது. குழந்தை எப்போது நகர்வதை நிறுத்தும்? எப்போது குழந்தையின் சதையை பிய்த்துத் திண்ணலாம் என்ற நோக்கத்தில் நடக்கின்ற காட்சியை பார்க்கிறார் கெவின். தன் காமிராவின் லென்சை சரிசெய்து அருமையான ஒரு காட்சியை படம் பிடிக்கிறார்.
அதில் சூடானின் பஞ்சம், வலி, வறுமை, இராணுவ அடக்குமுறை, தொற்று நோய், பல லட்சக் கணக்கான உயிர்களின் இறுதி வாக்குமூலம் அனைத்தும் ஒரே நேரத்தில் பதிவாகிறது. இந்தப் புகைப்படம் மார்ச் 3, 1993 அன்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் அச்சிடப் படுகிறது. வெளியிட்ட அன்று இரவே சுமார் 1000 பேர் பத்திரிக்கைக்குத் தொடர்பு கொண்டு அந்தப் பெண் குழந்தைக்கு என்னவாயிற்று என்று விசாரிக்கின்றனர்.
உண்மையில் கெவின்னுக்கு அந்தப் பெண் குழந்தையின் நிலைமை என்னவென்பது தெரியவில்லை. இந்த புகைப்படம் ஒரு வாரக் காலத்திற்குள்ளாகவே உலகம் முழுவதிலும் அனைவராலும் பேசப்படுகிறது. சூடானைப் பற்றிய உண்மை நிலவரம் ஐ.நா சபையின் அறிக்கைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அது வரை வெறுமனே உள்நாட்டுக் கலவரம் என்று பேசப்பட்டு வந்த சூடான் பொருளாதார நிலைமையில் பெருத்த மாற்றம். வறட்சி, பஞ்ச நிலைமை என்பது குறித்த விசாரணைகள் தொடங்குகின்றன. உலக நாடுகள் அனைத்தும் சூடானின் பொருளாதாரத்தையும் மக்கள் சுகாதாரத்தையும் முன்னேற்றுவதற்கு போதுமான வசதிகளை செய்து கொடுக்க முன்வருகின்றனர்.
அதே நேரத்தில் இந்தப் புகைப்படத்தை பார்த்த பலரும் புகைப்படம் எடுத்தவரைக் குறித்தே குற்றம் சாட்டுகின்றனர். இந்த குழந்தையின் நிலைமை என்ன? உயிரோடு இருக்கிறதா? அந்தப் புகைப்பட கலைஞர் அந்தக் குழந்தையை காப்பாற்ற முயலவில்லையா? கேமராவை சரியாக பயன்படுத்தத் தெரிந்த அந்த கலைஞர் மனித உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போய்விட்டாரா?
”காட்சியின் பின்னால் இருக்கும் இன்னொரு கழுகு” குழந்தையை சரியான கோணத்தில் படமெடுப்பதற்காக தனது கேமரா வில்லையை சரி செய்த கெவினும் ஒரு கொலையாளிதான் என்று The St.Peterburg Times நாளிதழ் கருத்து வெளியிட்டது.
இதனையொத்த பல கேள்விகள். கெவின் குடும்பத்தில் சூழல் மாறுகிறது. உலக நாடுகளில் இருந்து வந்த விமர்சனங்கள் அவரை தனக்குள்ளேயே புலம்ப வைக்கின்றன.
கெவின் கார்ட்டருக்கு 1994 இல் புலிச்சர் விருது அறிவிக்கப் படுகிறது. இவ்விருது நோபல் பரிசுக்கு இணையானது என்பதும் குறிப்பிடத் தக்கது. இவ்விருதினை பெற்ற நான்கு மாதங்களில் கெவின் இறந்து போகிறார் என்பதுதான் கொடுமையே. தனது உடம்பிற்குள் கார்பன் மோனாக்சைடை செலுத்திக் கொண்டு கெவின் இறந்து போகிறார். அவரின் கார் கடற்கரையின் சாலையில் இருந்து மீட்கப் படுகிறது. கூடவே ஒரு கடிதமும் கண்டெடுக்கப் படுகிறது.
“உண்மையில் மிகவும் வருந்துகிறேன். வாழ்க்கையின் வலிகள் சந்தோசத்தை மறக்கடிக்க செய்கிறது, மன அழுத்தத்திற்கு உள்ளானேன். போன் இல்லாமல் வாடகைக்கு பண இல்லாமல், குழந்தையின் செலவுக்கு பணம் இல்லாமல், கடனுக்கான பணம் இல்லாமல். கொலைகள் மற்றும் சடலங்கள் கோபம் மற்றும் சிறு குழந்தையின் மரண வலி ஆகியவற்றின் தெளிவான வலி என்னை மிகவும் வஞ்சித்தன. சந்தோசத்திற்காக ஏங்கும் பித்து பிடித்த மனிதனாக மாறிவிட்டேன்” என்று அக்கடிதத்தில் எழுதப் பட்டு இருக்கிறது.
சூடானில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் தான் அதிகமான மக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர் என்ற ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. அத்தகையதொரு கொடுமையான சூழலில் தான் பல மாற்றங்கள் நிகழ்ததப் பட்டன. ஜுலை 11, 2011 ஆம் ஆண்டு தெற்கு சூடான் தனி நாடாக அறிவிக்கப் பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது .
உண்மையில் கெவின் கார்ட்டர் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் அவர் எடுத்த அந்தப் புகைப்படம் உலக நாடுகளின் மத்தியில் சூடானின் நிலைமையை எடுத்துக் காட்டி இருக்கிறது. ஒரு குழந்தையை காப்பாற்ற முயற்சிக்காத ஒரு புகைப்பட கலைஞரை உலக மக்கள் அனைவருமே ஒரே நேரத்தில் திட்டி தீர்த்தனர். ஆனால் ஒரே தேசத்தைச் சேர்ந்த இரண்டு பகுதிகள் தங்களுக்கு இருந்த உள்நாட்டுக் கலவரங்களால் ஒட்டு மொத்த சூடான் நாட்டு மக்களையே கொன்று குவித்தது என்பதைக் கவனிக்கத் தவறி விடுகிறோம். ஒரு சிறு தவறு என்றாலும் தவறுதான். ஆனால் உள்நாட்டு கலவரங்கள், பொருளாதார சீர்கேடுகள், நாடுகளுக்குள் ஒற்றுமையின்மை என்று அரசுகள் தங்கள் கடமையை சரியாகச் செய்து முடிக்காத போது தனியொரு மனிதனை குற்றம் சாட்டி என்ன செய்வது? எளிமையாக கடந்து விட முடியாத ஒரு வலியை ஏற்படுத்திய ஒரு புகைப்படம் அதற்கு உயிர்க்கொடுத்தவரையும் தனது கதைக்குள் சேர்த்துக் கொண்டு விட்டது. இப்படித்தான் கெவின் கார்ட்டரின் கதையை பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments